ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (மார்ச் 30) ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அமீரக தலைவர்கள் மக்களுக்கு தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள், நாட்டின் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், “ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு, எனது சகோதரர்கள், எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரக மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அனைவருக்கும் அமைதி, ஆசீர்வாதம் மற்றும் செழிப்பை வழங்க இறைவனை ஒன்றாக பிரார்த்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் கூறுகையில் “ஈத் நல்வாழ்த்துக்கள்… ஐக்கிய அரபு அமீரக மக்களும், அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய மக்களும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்கட்டும். ஒவ்வொரு ஆண்டும், அனைத்து முஸ்லிம்களும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் அமைதியுடன் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
துபாயின் பட்டத்து இளவரசரும் இந்த சிறப்பான நாளில் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஐக்கிய அரபு அமீரக தலைமைக்கும், அமீரக மக்களுக்கும், அரபு மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் இதயப்பூர்வமான ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் ஆசீர்வாதங்களை வழங்குவானாக. ஈத் முபாரக் வாழ்த்துக்கள்” என்று துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கூறியுள்ளார்.
அமீரகத்தில் மார்ச் 29 அன்று ஷவ்வால் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30 அமீரகம் ஈத் அல் ஃபித்ரைக் கொண்டாடுகிறது. அமீரகம் போன்றே உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் இன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.