ADVERTISEMENT

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீவிபத்து.. 4 பேர் பலி, பலர் காயம்..

Published: 13 Apr 2025, 8:59 PM |
Updated: 13 Apr 2025, 9:25 PM |
Posted By: admin

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீவிபத்தால் ஏற்பட்ட கடும் புகையை சுவாசித்ததால் 6 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்களில் ஒருவர் 44வது மாடியில் இருந்து தீவிபத்தில் இருந்து தப்பிப்பதற்காக குதித்தவர் ஆவார்.

ADVERTISEMENT

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது அல் காசிமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷார்ஜாவில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு கட்டிடத்தில் காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஷார்ஜா பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் கட்டிடத்தில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர் என கூறப்பட்டுள்ளது.

நேரில் கண்டவர்கள் கட்டிடத்தின் மேல் இரண்டு தளங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். சஹாரா மையத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்த கட்டிடம் ஷார்ஜா எமிரேட்டில் உள்ள மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாகும். தீவிபத்து அறிந்ததைத் தொடர்ந்து காவல்துறை, ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்கள் அப்பகுதியில் வந்தடைந்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

மாலை 5 மணி நிலவரப்படி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபின்னர் குளிரூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டிடத்தில் பாதிப்படையாத தளங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மீண்டும் தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டி அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய, அந்த இடம் ஷார்ஜா காவல்துறையின் தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசரகால மீட்பு முயற்சிகளை எளிதாக்குவதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கட்டிடத்தைச் சுற்றி போக்குவரத்து மாற்றுப்பாதைகள் உள்ளன. 

ADVERTISEMENT

இந்த தீ விபத்து மட்டுமல்லாமல் இதே நாளில் ஷார்ஜா தொழில்துறை பகுதி 15ல் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கிடங்கு ஒன்றிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தும் பாதுகாப்பு குழுவினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel