அபுதாபியில் உள்ள முக்கிய சாலையான ஷேக் முகமது பின் ரஷீத் சாலையில் (E311) குறைந்தபட்ச வேக வரம்பு 120 கிமீ/மணி என சமீப காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த குறைந்த பட்ச வேக வரம்பு நீக்கப்படுவதாக அபுதாபி மொபிலிட்டி இன்று (திங்கள்) அறிவித்துள்ளது. இது போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதையும் கனரக லாரிகளின் இயக்கத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி இனிமேல், வாகன ஓட்டிகள் குறைந்தபட்சம் 120 கிமீ/மணி வேகத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்று ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் அனைத்து சாலை பயனர்களுக்கும், குறிப்பாக பெரிய வாகனங்களுடன் பரபரப்பான பாதையில் பயணிப்பவர்களுக்கு, சிறந்த சாலை ஓட்டம் மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் சூழலுக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 2023-ல் இருந்து E311 இல் குறைந்தபட்ச வேக வரம்பு முதல் இரண்டு பாதைகளுக்கு மணிக்கு 120 கி.மீ. ஆகும். இந்த முக்கிய நெடுஞ்சாலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ ஆக உள்ளது. மேலும் இடதுபுறத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது பாதைகளில் குறைந்தபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ பின்பற்ற வேண்டும்.
இந்த குறைந்தபட்ச வேக வரம்பிற்கும் கீழ் குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு “சாலைக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேகத்திற்குக் கீழே வாகனத்தை ஓட்டியதற்காக” 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது இந்த விதியானது நீக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
ஷேக் முகமது பின் ரஷீத் சாலைக்கான இந்த சமீபத்திய மாற்றம், போக்குவரத்து ஓட்டம் மற்றும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அபுதாபி மொபிலிட்டியின் மற்றொரு பாதுகாப்பு சார்ந்த முயற்சியைத் தொடர்ந்து வருகிறது. இதே போல், அபுதாபி-ஸ்வீஹான் சாலை (E20) மற்றும் ஷேக் கலீஃபா பின் சயீத் சர்வதேச சாலை (E11) உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் வேக வரம்புகளைக் குறைப்பதை அதிகாரிகள் அறிமுகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.