இஸ்ரேல் ஈரான் இடையே போர் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் கடந்த வார இறுதியில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, திங்களன்று கத்தாரில் உள்ள அமெரிக்காவால் நடத்தப்படும் அல் உதெய்த் ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதலை கத்தார் அரசும் உறுதிப்படுத்தியது. மேலும் இது அதன் இறையாண்மையை “அப்பட்டமாக மீறுவதாக” கூறியதுடன் அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் வான்வெளியை மூடிய கத்தார் அரசு ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் தனது வான்வெளியை திறந்துள்ளது.
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகியவை தற்காலிகமாக தங்கள் வான்வெளியை மூடின, அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகங்கள் பிராந்தியத்தில் உள்ள தங்கள் குடிமக்களை பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தின. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை ஈரானிய தாக்குதலை கடுமையாக கண்டித்த்துடன், கத்தாருடன் முழு ஒற்றுமையை வெளிப்படுத்தின, மேலும் இதுபோன்ற செயல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் எச்சரித்தன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா நடத்திய ஈரான் தாக்குதலுக்கு பின் அதன் கட்டமைப்பை அழித்துவிட்டபடியால் அணு ஆயுதங்களை தயாரிக்கும் வல்லமை ஈரானுக்கு இனி இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியதன் பின் போர் நிறுத்தம் சம்பந்தமாக கத்தார் எமிருடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டதாகவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள கத்தார் எமிர் வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மட்டும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பில் 12 நாள் போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், போர் நிறுத்தம் குறித்து முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லை, ஆனால் இஸ்ரேல் தனது “சட்டவிரோத ஆக்கிரமிப்பை” நிறுத்தினால் தெஹ்ரான் தாக்குதல்களை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளார். எனவே போர் நிறுத்தம் தொடர்பான முழுமையான விபரங்கள் இனிமேல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.