சவூதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத் நேற்று சனிக்கிழமை (ஜூலை 19) காலமானார் என்று சவுதி அரசு ஊடகம் அறிவித்துள்ளது. ‘தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்படும் அவர், கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததில் அவரின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மருத்துவமனை கண்காணிப்பில் கோமாவில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மரணமடைந்ததை தொடர்ந்து தலைநகர் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) இளவரசர் அல்வலீத்தின் இறுதி பிரார்த்தனைகள் நடைபெறும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. இளவரசரின் தந்தை கலீத் பின் தலால், சமூக ஊடக தளமான X இல் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்:
அதில் “அல்லாஹ்வின் ஆணை மற்றும் விதியின் மீது முழு நம்பிக்கையுடன், ஆழ்ந்த சோகத்துடனும் துக்கத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், அல்லாஹ்வின் கருணையால் காலமானார், அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இளவரசர் காலித் பின் தலால் தனது மகனுக்காக பிரார்த்தனை செய்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை என்றும், ரமழானின் இரவில் தஹஜ்ஜுத் தொழுகையின் போதும், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக கோமாவில் இருந்த தனது அன்பு மகன் மீண்டும் ஆரோக்கியமாக திரும்பி வருவார் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து வந்தார் என்றும் அரச குடும்பத்து வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel