சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் ஒரு வழக்கமான பயணத்தை தொடங்கிய இரண்டு இளைஞர்களுக்கு அதுவே தங்கள் உலக வாழ்க்கையின் கடைசி பயணமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆம், சாகச பயணத்திற்காக சென்ற இரண்டு இளம் சவுதி இளைஞர்களின் வாழ்க்கை தற்போது சோகத்தில் முடிந்துள்ளது,
ஹமூத் ஜிஃபின் அல் சாதி மற்றும் அவரது நண்பர் வாலித் குஷெய்ம் அல் சாதி என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இருவரும், அல் ஜுனைனா மையத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் பிஷா மற்றும் தத்லித் மாகாணங்களுக்கு இடையே உள்ள ஒரு தொலைதூர பாலைவனப்பகுதிக்குள் சாகச பயணத்திற்காக சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர்களின் வாகனம் பழுதடைந்து குன்றுகளுக்கு இடையே மணலில் சிக்கிக்கொண்டுள்ளது, அதை விடுவிக்க அவர்கள் இருவரும் பலமுறை முயற்சித்த போதிலும், அவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இந்நிலையில் கையில் குடிநீர் இல்லாமல் போனதாலும் மற்றும் பாலைவனத்தில் கடும் வெப்பநிலை நிலவியதாலும், அவர்கள் இருவரும் தாகத்தால் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவரான வலித்தின் மாமா டாக்டர் முகமது உபைத் அல் சாதி, இந்த சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கூறுகையில், பாலைவனப் பகுதிக்குச் சென்ற அவர்களின் கார் மணல் திட்டுகளுக்கு இடையில் சிக்கியதாகவும், அவர்கள் அதை விடுவிக்க முயன்ற போதிலும், கடுமையான வெப்பத்தில் அவர்களால் உயிர்வாழ முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும், மீட்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு செல்லும் முன்பே அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கு சென்ற மீட்பு குழுவினர்கள் அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சாகசப் பயணத்திற்காக சென்றவர்கள் பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel