உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றான துபாயின் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கும் நிலையில் 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் துபாயின் பொருளாதாரம் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆண்டுக்கு ஆண்டு 4.4% அதிகரித்து 241 பில்லியன் திர்ஹம்சை எட்டியது என கூறப்பட்டுள்ளது.
வர்த்தகம், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியின் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7% அதிகரித்து 122 பில்லியன் திர்ஹம்ஸாக விரிவடைந்து இரண்டாவது காலாண்டில் ஒரு சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில், இந்த முடிவுகள் துபாய் எமிரேட்டின் தொடர்ச்சியான பொருளாதார வலிமையையும், புதுமை மற்றும் பல்வகைப்படுத்தலை வளர்ப்பதில் அதன் வெற்றியையும் எடுத்துக்காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “துபாயின் பொருளாதாரமானது அனைத்து துறைகளிலும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 4.4% அதிகரித்து 241 பில்லியன் திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது. மேலும் இரண்டாவது காலாண்டில் வலுவான செயல்திறனால் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இந்த காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7% அதிகரித்து திர்ஹம் 122 பில்லியனாக உள்ளது” என்றும் ஷேக் ஹம்தான் கூறியுள்ளார்.
அத்துடன் “மேன்மைக்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, துபாய், புதுமை, பல்வகைப்படுத்தல் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவற்றின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட மாதிரியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த முடிவுகள் பொது மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் துபாயின் பரந்த குழுவின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன. துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33 இன் இலக்குகளை அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் நன்றி” என்றும் கூறியுள்ளார்.
முக்கிய துறைகளில் வளர்ச்சி
துபாயின் பொருளாதார விரிவாக்கமானது அதன் பன்முகப்படுத்தப்பட்ட கட்டமைப்பை தொடர்ந்து பிரதிபலிக்கிறது. அதாவது எண்ணெய் சார்ந்த துறை மட்டுமல்லாமல் எண்ணெய் அல்லாத துறைகளில் வலுவான வளர்ச்சியால் ஆதரிக்கப்படுகிறது. அவற்றில் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலா ஆகியவை முக்கிய பங்களிப்பாக இருந்தன என கூறப்படுகின்றது.
புதுமை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திலும் துபாய் எமிரேட்டின் கவனம் அதன் போட்டித்தன்மையை வலுப்படுத்தியுள்ளது, தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற உயர் வளர்ச்சி பகுதிகளுக்கு புதிய வணிகம் மற்றும் முதலீட்டை ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33 (Dubai Economic Agenda D33)
இந்த செயல்திறன் துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33 இன் இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. இது அடுத்த 10 ஆண்டுகளுக்குள் துபாயின் பொருளாதாரத்தின் அளவை இரட்டிப்பாக்கி உலகின் முதல் மூன்று நகர்ப்புற பொருளாதாரங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும் வடிவமைக்கப்பட்ட முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியின் முடிவுகள், அந்த நோக்கங்களை நோக்கி நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன என்றும், மாறிவரும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் துபாயின் வளர்ச்சியை வலுப்படுத்துகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel