ADVERTISEMENT

துபாய்: பல சாலைகளில் RTA மேற்கொண்ட மாற்றம்.. அபராதத்தை எதிர்கொள்ளும் வாகன ஓட்டிகள்..

Published: 21 Nov 2025, 9:40 AM |
Updated: 21 Nov 2025, 1:03 PM |
Posted By: admin

துபாயில் போக்குவரத்தை மேம்படுத்த தொடர்ச்சியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் துபாயின் குறிப்பிட்ட சாலைகளில் விடுபட்ட வெள்ளை கோடுகளுக்கு பதிலாக தொடர்ச்சியான வெள்ளைக்கோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் வாகன ஓட்டிகளும் பல சாலைகளில் புதிய கேமராக்கள் மற்றும் புதிய திடமான சாலை அடையாளங்களை கவனித்ததாக கூறுகின்றனர். இது தினசரி பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ‘நோ பாஸிங் லைன்கள் (no passing lines)’ இப்போது இத்திஹாட் சாலை, பாக்தாத் ஸ்ட்ரீட், விமான நிலைய சுரங்கப்பாதை (airport tunnel), E311 மற்றும் E611 ஆகியவற்றில் போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு போக்குவரத்து ஓட்டத்தை சீராக்க உதவுகிறது என்று வாகன ஓட்டிகள் கூறிய போதிலும், அந்த சாலைகளில் செல்லும் சில வழக்கமான பயணிகள் தாங்கள் இன்னும் புதிய அடையாளங்களுக்கு ஏற்ப மாறி வருவதாகவும், சில நேரங்களில் தெரியாமல் அபராதம் பெற்றுள்ளதாகவும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ADVERTISEMENT

அல் கூஸில் பணிபுரியும் ஷார்ஜா குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், இத்திஹாத் சாலை அல்லது ஏர்போர்ட் டன்னல் சாலை வழியாக தினமும் வாகனம் ஓட்டுகிறார் என்றும், அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் பகுதிகளில் புதிய பாதைகள் திடீரென தோன்றியதாகவும் கூறியுள்ளார். அவற்றில் ஒன்றை முந்திச் சென்றதற்காக சமீபத்தில் அவருக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து கூறுகையில், “நான் தினமும் இந்த சாலைகளைப் பயன்படுத்துகிறேன், இந்தப் புதிய பாதைகள் திடீரென்று தோன்றின. “no passing line “ என்றால் என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் இவை புதிதாக போடப்பட்டுள்ளன. இதற்காக எங்களை எச்சரிக்கும் எந்த அறிகுறியும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார். மேலும் கூறுகையில் “நான் அதனை கவனிக்கும் நேரத்தில், ஏற்கனவே பாதையை மாற்றிவிட்டேன். அபராதம் வந்தபோதுதான் எனக்குப் புரிந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எக்ஸிட் இடங்களுக்கு அருகில் இந்த கோடுகள் வரையப்பட்டிருப்பதால் முந்தைய முறைகளுக்குப் பழகிய தினசரி பயணிகளுக்கு விரைவான முடிவுகள் எடுக்க கடினமாகின்றன. இதனால் அவர்கள் அபராதங்களை பெறும் நிலைக்கு ஆளாகின்றார்கள் என கூறப்படுகின்றது.

RTA-வின் இலகுரக வாகன ஓட்டுநர் வழிகாட்டியின்படி, கடந்து செல்லக் கூடாத கோடு என்பது தொடர்ச்சியான வெள்ளைக் கோட்டைக் குறிக்கிறது, அதை வாகன ஓட்டிகள் கடக்கக்கூடாது. மேலும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

மேற்கூறியது போன்று E311 இல் தினமும் பயணிக்கும் முஹைஸ்னாவைச் சேர்ந்த வழக்கமான பயணி, எக்ஸிட் 63க்கு அருகில் புதிய தொடர்ச்சியான கோட்டை தற்செயலாகக் கடந்ததால் தனக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இதுபோன்றதொரு கோடு புதிதாக குளோபல் வில்லேஜ் அருகே உள்ளது. எந்த எச்சரிக்கை பலகையையோ அறிவிப்பையோ அங்கு வைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய்-ஷார்ஜா எல்லைக்கு அருகிலுள்ள E611 இல் இதேபோன்ற ஒரு பகுதி இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

சில வாகன ஓட்டிகள் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வரவேற்பதாகக் கூறினர், ஆனால் போதுமான முன் அறிவிப்பு இல்லாமல் புதிய பாதைகள் விரைவாகச் சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் “புதிய திடமான கோடு வளைவுக்கு முன்பே வருகிறது, எனவே நீங்கள் எக்ஸிட்டை தவறவிட்டால், சுற்றிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை,” என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

பாதுகாப்பை மேம்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கும் வேளையில் பாதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் ஒரு பலகையை வைக்கலாம் அல்லது எச்சரிக்கை செய்யலாம். இது ஓட்டுநர்களுக்கு சரிசெய்ய நேரம் அளிக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel