ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சமீப காலமாக வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதில் இன்று காலை 6.30 மணிக்கு அல் அயினில் உள்ள ரக்னாவில் 9.8°C ஆகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாடு குளிர்காலத்திற்கு மாறி வரும் கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த வெப்பநிலை பதிவானது இதுவே ஆகும்.
மேலும் தொடர்ந்து வெப்பநிலை குறையும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது வெப்பநிலை கூடுதலாக 4 முதல் 6 டிகிரி வரை குறையக்கூடும் என்றும், இது வரும் நாட்களில் இன்னும் குளிரான நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) முன்னறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வசிப்பவர்கள் நாளை (நவம்பர் 10 திங்கட்கிழமை) தூசி நிறைந்த வானிலையை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி தூசி தொடர்ந்து வீசும் என்றும், மேற்கு கடற்கரைகள் மற்றும் தீவுப் பகுதிகளில் சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் தென்கிழக்கு காற்று லேசானது முதல் மிதமானது வரை வீசும், இது வடமேற்கு திசையில் மணிக்கு 10-20 கிமீ வேகத்தில் வீசும் என்றும் சில சமயங்களில் மணிக்கு 30 கிமீ வேகத்தை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
துபாயில் வெப்பநிலை குறைந்தபட்சம் 23ºC ஆகவும், ஷார்ஜாவில் 19ºC ஆகவும் இருக்கும். அபுதாபியில் 22ºC ஆகக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.