புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு துபாய் நகரம் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புத்தாண்டு, ரமலான் மற்றும் தேசிய விடுமுறைகள் போன்ற முக்கிய பண்டிகைகள் மற்றும் பெரிய அளவிலான நிகழ்வுகளின் போது குடியிருப்பாளர்களின் பயணத்தை எளிதாக்கும் தனது வருடாந்திர வழக்கத்தைத் தொடர்ந்து, ஜனவரி 1, 2026 அன்றுக்கான இலவச பொது பார்க்கிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக எமிரேட் முழுவதும் மக்கள் கூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று RTA தெரிவித்துள்ளது.
இலவச பார்க்கிங்
RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, வருகின்ற வியாழன், ஜனவரி 1, 2026 அன்று துபாய் முழுவதும் உள்ள பொது பார்க்கிங் மண்டலங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது. இருப்பினும், மல்டி லெவல் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அல் கைல் கேட் (N-365) ஆகிய இடங்களில் கட்டணம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான பார்க்கிங் கட்டணங்கள் வெள்ளிக்கிழமை, ஜனவரி 2 அன்று மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பேருந்து சேவை மாற்றங்கள்
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நகரங்களுக்கு இடையேயான பேருந்து வழித்தடங்களில் தற்காலிக மாற்றங்களை RTA அறிவித்துள்ளது:
- ரூட் E100 (அபுதாபி–அல் குபைபா) ஜனவரி 4, 2026 வரை சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
- கடைசிப் பயணம்: டிசம்பர் 31 அன்று அபுதாபியிலிருந்து மதியம் 12 மணிக்கும், அல் குபைபாவிலிருந்து மதியம் 2 மணிக்கும் இயக்கப்படும்.
- இந்தக் காலகட்டத்தில் அபுதாபிக்கு பயணம் செய்யும் பயணிகள் இப்ன் பத்தூதா பஸ் நிலையத்திலிருந்து ரூட் E101 ஐப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ரூட் E102 டிசம்பர் 31 அன்று இப்ன் பத்தூதா பஸ் நிலையத்திலிருந்து மதியம் 2 மணி முதல் நாள் இறுதி வரை இயக்கப்படும்.
துபாய் மெட்ரோ இடைவிடாமல் இயங்கும்
புத்தாண்டு பயணத் தேவையை நிர்வகிக்கும் வகையில், துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் க்ரீன் ஆகிய இரு வழித்தடங்களிலும் சேவைகள் கிட்டத்தட்ட 43 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கும். அதாவது புதன், டிசம்பர் 31, 2025 அன்று அதிகாலை 5 மணி முதல் வியாழன், ஜனவரி 1, 2026 அன்று இரவு 11.59 மணி வரை இயக்கப்படும்.
துபாய் டிராம் நேரங்கள்
துபாய் டிராம் சேவைகளும் டிசம்பர் 31 அன்று காலை 6 மணி முதல் ஜனவரி 1 அன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று RTA தெரிவித்துள்ளது.
வாகன சோதனை மையங்கள்
அதேசமயம், அனைத்து RTA வாகன சோதனை மையங்களும் ஜனவரி 1, 2026 அன்று மூடப்பட்டிருக்கும். வழக்கமான செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை, ஜனவரி 2 அன்று மீண்டும் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்
இவற்றுடன் அனைத்து RTA வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் ஜனவரி 1 அன்று மூடப்பட்டிருக்கும். இருப்பினும், அல் பர்ஷா, அல் த்வார், அல் கிஃபாஃப் மற்றும் RTA தலைமையகத்தில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சிப் பகுதிகள் வழக்கம் போல் 24/7 தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, குடியிருப்பாளர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel