அமீரகத்தில் பல பயணிகள் ஒன்றாகச் சென்று ஒரே டாக்ஸியில் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் டாக்ஸி-பகிர்வு சேவை (shared taxi service) துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையில் தற்பொழுது இரண்டு புதிய இடங்களுக்கு 6 மாத சோதனை கட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) திங்களன்று அறிவித்துள்ளது.
இந்த பகிரப்பட்ட டாக்ஸி சேவை முதன்முதலில் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது துபாயில் உள்ள இப்னு பதுதா மால் மற்றும் அபுதாபியில் உள்ள அல் வஹ்தா மால் இடையே இயங்கி வருகின்றது. இந்நிலையில் RTA இந்த சேவையை கூடுதலாக இரண்டு இடங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் துபாய் மெரினா மால், பிசினஸ் பே மெட்ரோ நிலையம் மற்றும் பாம் ஜுமேரா – அட்லாண்டிஸ் மோனோரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கும் மற்றும் பிசினஸ் பே மெட்ரோ நிலையம், அல் சத்வா பேருந்து நிலையம் மற்றும் துபாய் மெரினா மால் ஆகியவற்றுக்கான வழித்தடங்களுடன் துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டருக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த சேவைக்கு சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து கணிசமான வரவேற்பு கிடைத்தது என்றும், அவர்கள் இதை ஒரு வசதியான, வேகமான மற்றும் நியாயமான விலையில் பயணம் செய்யும் விருப்பமாக கருதுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் “இப்னு பதுதா மால் மற்றும் அல் வஹ்தா மால் இடையே இயங்கும் பகிரப்பட்ட டாக்ஸி சேவை, இரண்டு எமிரேட்களுக்கு இடையேயான பயணத்திற்காக அதைத் தேர்ந்தெடுக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் 228 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இந்த வலுவான கோரிக்கை, இரண்டு கூடுதல் இடங்களைச் சேர்க்க சோதனை அடிப்படையில் சேவையை விரிவுபடுத்த எங்களை ஊக்குவித்துள்ளது” என்று RTAவின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி கூறியுள்ளார்.
அத்துடன் “பயணிகளுக்கான கட்டணச் செலவுகளைக் குறைப்பதே இதன் நோக்கம்,” என்று குறிப்பிட்ட ஷக்ரி, “பல பயணிகள் ஒரே டாக்ஸியைப் பகிர்ந்து கொள்ள உதவுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த முயற்சி உதவுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அணுகுமுறை மென்மையான போக்குவரத்து ஓட்டத்திற்கு பங்களிக்கிறது மற்றும் கார்பன் உமிழ்வை குறைப்பது உட்பட சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகிறது என கூறப்பட்டுள்ளது. உரிமம் பெறாத போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த சேவை உதவியுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel