ADVERTISEMENT

UAE: அல் அய்ன் ஜபெல் ஹஃபீத்தின் குறிப்பிட்ட இடங்களில் பார்பிக்யூவிற்கு தடை.. மீறினால் 4,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்..

Published: 4 Jan 2026, 2:31 PM |
Updated: 4 Jan 2026, 2:31 PM |
Posted By: admin

அமீரகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றான அல் அய்ன் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளால் பெரிதும் விரும்பி செல்லக்கூடிய இடமாகும். இங்குள்ள ஜெபல் ஹஃபீத் மலை உச்சிக்கு சென்று பார்பிக்யூ செய்து கொண்டும் அங்கு இரவு நேர குளிரில் நேரத்தை கழித்துவிட்டு மலையில் இருந்து இறங்கி வருவதென நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அவ்வப்போது செல்லக்கூடிய ஜெபல் ஹஃபீத் மலையின் வாகன நிறுத்துமிடங்களில் தற்பொழுது பார்பிக்யூவை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

ADVERTISEMENT

“இந்தப் பகுதியில் பார்பிக்யூ/BBQ கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்” என்று நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை மற்றும் அல் அய்ன் நகர முனிசிபாலிடியால் ஜெபல் ஹஃபீத்தின் பல்வேறு வாகன நிறுத்துமிடங்களில் வைக்கப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவதால், ஜெபல் ஹஃபீத் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களுக்கான பல்வேறு உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட செயல்பாடுகளுடன் இந்தப் பகுதி பெயர் பெற்றது. இந்நிலையில் அதிகாரிகள் பார்பிக்யூவிற்கு தடை விதித்துள்ளனர். கூடுதலாக, கிரீன் முபஸ்ஸாரா பார்க் பகுதியில் பார்வையாளர்களுக்குப் பகுதியின் அழகைப் பராமரிக்கும் பொருட்டு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அபுதாபி எமிரேட்டில் பொது தோற்றம், சுகாதாரம் மற்றும் அமைதியைப் பாதுகாத்தல் தொடர்பான 2012 ஆம் ஆண்டின் சட்டம் எண் (2) இன் படி, பொது இடங்களை அணுகுதல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான வழிகாட்டுதல், எச்சரிக்கை அல்லது அறிவுறுத்தல் பலகைகள் அல்லது தடை விதிக்கப்பட்டிருப்பதை பின்பற்றத் தவறினால் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக குற்றத்தைச் செய்தால் அபராதம் 2,000 திர்ஹம்ஸ் ஆகவும், மூன்றாவது முறையாக 4,000 திர்ஹம்ஸ் ஆகவும் இரட்டிப்பாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 2025 இல், அரபு மற்றும் பிராந்திய மட்டங்களில் எமிராட்டி சுற்றுலா தலங்களின் வளர்ந்து வரும் நிலையை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான அரபு சுற்றுலா தலைநகராக அல் அய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த தடை குறித்து துபாய் குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில் “கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரக தேசிய தின விடுமுறை நாட்களில் குடும்ப நண்பர்களுடன் ஜெபல் ஹஃபீத்துக்குச் சென்றோம், அங்கு எந்த அடையாளப் பலகைகளும் இல்லாததால் பார்பிக்யூ செய்து சாப்பிட்டோம். பள்ளி மீண்டும் தொடங்குவதற்கு முன்பு வார இறுதியில் மீண்டும் செல்ல முடிவு செய்தோம், மேலும் வெவ்வேறு வாகன நிறுத்துமிடங்களிலும் அடையாளப் பலகைகளைக் கண்டோம், ”என்று தெரிவித்துள்ளார். எனவே அல் அய்ன் செல்லக்கூடிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்பிக்யூ செய்ய முடிவெடுத்திருந்தால் அதற்கான முறையான இடத்தை தேர்வு செய்து அபராதத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.