பொருளாதாரத்தில் தொடர்ந்து அதிவேக வளர்ச்சியடைந்து வரும் அமீரகம் சமீப காலமாக எண்ணெய் அல்லாத வர்த்தகத்திலும் தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொண்டு முன்னேறி வருகின்றது. இந்நிலையில் வரலாற்றில் முதல்முறையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம் ஒரு டிரில்லியன் டாலர்களை (3.8 டிரில்லியன் திர்ஹம்) தாண்டியுள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும் என்று துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவராகவும் பிரதமராகவும் பணியாற்றும் துபாய் ஆட்சியாளர், சனிக்கிழமை மதிப்பாய்வு செய்த புதிய அறிக்கையின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் 813 பில்லியன் திர்ஹம்களைத் தாண்டியுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டை விட 45 சதவீத அபார வளர்ச்சியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில் “இந்த புள்ளிவிவரங்கள் 2031 ஆம் ஆண்டுக்குள் நாங்கள் இலக்கை அடைவோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்ததில் 95 சதவீதத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் அடைந்துவிட்டோம்,” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் “எங்கள் முதலீட்டு சூழல் இப்போது முழுமையடைந்துள்ளது. எங்கள் சர்வதேச கூட்டாண்மைகள் இரட்டிப்பாகியுள்ளன. தனியார் துறையுடனான எங்கள் கூட்டாண்மைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐக்கிய அரபு அமீரகம் மீதான உலகின் நம்பிக்கை இறைவனின் கிருபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் அனைத்து தேசிய குழுவையும் நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று ஷேக் முகமது கூறியுள்ளார்.