ஐக்கிய அரபு அமீரகத்தில் பிச்சை எடுப்பது குற்றமாக கருதப்படும் நிலையில் அதிகாரிகள், பிச்சை எடுப்பதற்கு எதிராக எச்சரிக்க பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். கூட்டாட்சி சட்டத்தின் கீழ் அது ஒரு கிரிமினல் குற்றம் என்பதை அவ்வப்போது வலியுறுத்தியும் வருகின்றனர்.
தற்பொழுது ரமலான் மாதம் நெருங்கி வரும் நிலையில் இந்த மாதத்தினை பயன்படுத்தி மக்களிடம் அனுதாபங்களை பெற்று பிச்சை எடுப்பதில் இருந்து பாதுகாக்கவும், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் தொண்டு நன்கொடைகள் முறையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் பிச்சை எடுப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குற்றங்கள் மற்றும் தண்டனைகள் சட்டத்தை அறிவிக்கும் 2021ஆம் ஆண்டின் ஆணை எண் (31) இன் படி, பொருள் அல்லது நிதி ஆதாயத்திற்காக பிச்சை எடுப்பது கண்டறியப்பட்டால், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம்களுக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.
பிரிவு 475 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்த சட்டம், நேரடி அல்லது மறைமுகமாக செய்யப்படும் இது போன்ற எந்தவொரு செயலுக்கும் பொருந்தும். தனிநபர் உடல் ரீதியாக வேலை செய்யக்கூடியவராக இருந்தால் அல்லது வெளிப்படையான வருமான ஆதாரத்தைக் கொண்டிருந்தால், அல்லது காயமடைந்ததாகவோ/ஊனமுற்றவராகவோ நடிப்பது அல்லது அனுதாபத்தை ஈர்ப்பதற்காக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவது போன்றவையாக இருக்கும் பட்சத்தில் அபராதங்கள் அதிகரிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது. இவ்வாறு பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களை நிர்வகிப்பவர்கள் அல்லது வழிநடத்துபவர்கள் குறைந்தது ஆறு மாத சிறைத்தண்டனையையும், 100,000 திர்ஹம் முதல் அபராதத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்று பிரிவு 476 கூறுகிறது. பிச்சை எடுக்க வைப்பதற்காக தனிநபர்களை நாட்டிற்குள் சேர்க்கும் அல்லது அழைத்து வரும் எவருக்கும் இதே தண்டனைகள் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது .
குழுவாக சேர்ந்து பிச்சை எடுப்பவர்களும் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். அதாவது பிரிவு 477 இன் கீழ், சம்பந்தப்பட்டவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் 5,000 திர்ஹம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். குற்றவாளி பிச்சை எடுப்பவருக்கு பொறுப்பான பாதுகாவலராகவோ அல்லது அவர்கள் மீது அதிகாரம் செலுத்துபவராகவோ இருந்தால் தண்டனைகள் அதிகரிக்கப்படலாம்
அதே போல் சட்டவிரோதமாக உதவி பெற டிஜிட்டல் தளங்கள் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் அல்லது தவறான கூற்றுக்கள் அல்லது முறையீடுகள் உட்பட மற்றவர்களை தவறாக வழிநடத்தும் நபர்களுக்கு பிரிவு 51 ன் படி மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.