ADVERTISEMENT

UAE: ஏவுகணையின் உடைந்த பாகம் விழுந்ததில் 2 பேர் பலி, 3 பேர் காயம்.. பல வாகனங்களும் சேதம்..

Published: 26 Mar 2026, 11:44 AM |
Updated: 26 Mar 2026, 11:44 AM |
Posted By: admin

அமீரகத்தில் ஈரானின் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்படும் போதிலும் அவ்வப்போது உடைந்த பாகங்கள் கீழே விழுவதில் அவ்வப்போது அசம்பாவிதம் ஏற்படுகின்றது. அதே போன்ற ஒரு சம்பவத்தில் இன்று (வியாழன்) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அபுதாபியின் ஸ்வைஹான் ஸ்ட்ரீட்டில், வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையிலிருந்து சிதறிய பாகங்கள் விழுந்து உயிரிழப்புகளையும் சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியதாக அபுதாபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தின் விளைவாக, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர், மற்றும் பல வாகனங்கள் சேதமடைந்தன என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசரகால சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிக்கைகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் (MOD) உறுதிப்படுத்தியது. அத்துடன் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்கத் தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் பிராந்திய மோதல்களின் ஒரு பகுதியாக, நேற்று ( மார்ச் 2026) மட்டும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட 9 ட்ரோன் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துள்ளன. இதன்மூலம் ஈரானிய தாக்குதல் தொடக்கத்திலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை இலக்காகக் கொண்ட 357 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,815 ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக இடைமறித்துள்ளன. அத்துடன் உயிரிழப்புகள் அபுதாபியில் நடந்த சமீபத்திய சம்பவத்துடன் சேர்த்து, மொத்த உயிரிழப்புகளை 11 ஆக உயர்த்தியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் மூன்று உறுப்பினர்கள் பணியின்போது வீரமரணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்தின் பாகங்கள் கீழே விழுந்தது தொடர்பான தனித்தனி சம்பவங்களில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட ஆறு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தம் 166 பேர் காயமடைந்தனர்; இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரையிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.