கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் மூன்று வாரங்களாகத் தொடரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் நாளை மார்ச் 20ம் தேதி ஈத் அல் ஃபித்ர் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை கொண்டாடவிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அபுதாபி அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். அமீரகத்தில் உயிர்கள் மற்றும் உடைமைகளின் தொடர்ச்சியான பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், கொண்டாட்டங்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சமூக உறுப்பினர்களை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி குடிமைப் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள்:
- பட்டாசுகளைப் பயன்படுத்துவதையோ அல்லது கையாளுவதையோ தவிர்க்கவும்.
- பொறுப்புடன் வாகனம் ஓட்டவும் மற்றும் சாகசங்களையும் பொறுப்பற்ற நடத்தையையும் தவிர்க்கவும்.
- குழந்தைகளை மேற்பார்வையின்றி விளையாடவோ அல்லது சாலையைக் கடக்கவோ அனுமதிக்காதீர்கள்.
முக்கிய சாலைகள், முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுப் பூங்காக்களில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ரோந்துப் பணிகளை அதிகரிப்பதை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்திறன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வழிகாட்டுதல்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மார்ச் 18 ஆம் தேதி மாலையில் பிறை தென்படாததால், இன்று ரமலானின் 30வது நாளாக இருக்கும் எனவும், நாளை மறுநாள் மார்ச் 20, வெள்ளிக்கிழமை ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாக இருக்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த வருடம் ஈத் அல் ஃபித்ருக்கு மார்ச் 19 முதல் மார்ச் 22 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறையும் அமீரகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel