ட்ரோன் இடைமறிப்பின் விளைவாக, துபாயின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் சிதறல்கள் விழுந்ததால் 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக சற்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தால் சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் இரண்டு இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் மற்றும் ஒரு இலங்கை நாட்டவர் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க கையாளப்பட்டதாக துபாய் ஊடக அலுவலகம் (DMO) கூறியுள்ளது.
இன்று பலமுறை, துபாய்வாசிகள் பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டனர். குடியிருப்பாளர்கள் கேட்ட அந்தச் சத்தங்கள், நடந்துகொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளே என்று துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏவுகணை அச்சுறுத்தல் நீங்கும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர், அதே நேரத்தில் பாதுகாப்புப் படைகள் ஈரானிலிருந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக இடைமறிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 178 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.