ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் இன்றுடம் முடிவடைவதால் நாளைய தினம் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் நாடு முழுவமும் கொண்டாடப்படவுள்ளது. மேலும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 22ம் தேதி வரை அமீரகத்தில் நான்கு நாட்கள் பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, துபாய் குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் இந்த நீண்ட வார இறுதியை முழுமையாக அனுபவிக்க உதவும் வகையில், குடும்பத்தினருக்கு ஏற்ற செயல்பாடுகள், குடும்பங்களுக்கென பிரத்யேக கடற்கரைப் பகுதிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஆகிய கொண்டாட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த நான்கு நாட்கள் விடுமுறைக் காலத்தில், துபாயின் மிகவும் பிரபலமான பல கடற்கரைகள் பிரத்தியேகமாகக் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, ஜுமைரா 1, ஜுமைரா 2, ஜுமைரா 3, உம் சுக்கீம் 1 மற்றும் உம் சுக்கீம் 2 ஆகிய இடங்களில் உள்ள இரவு நேர கடற்கரைகள் உட்பட ஐந்து கடற்கரைகளும் குடும்பங்களுக்கு மட்டுமேயான பகுதிகளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூங்கா நிகழ்வுகள்
ஈத் பண்டிகையின் ஒரு பகுதியாக, துபாயின் மிகவும் பிரபலமான மூன்று பூங்காக்கள் ஈத் விடுமுறையின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில் சிறப்பு மாலை நேர நிகழ்வுகளை நடத்தும் என துபாய் முனிசிபாலிட்டி (DM) அறிவித்துள்ளது. அதன்படி, முஷ்ரிஃப் தேசியப் பூங்கா, அல் மம்சார் பூங்கா மற்றும் ஸபீல் பூங்கா ஆகியவை மாலை 4 மணி முதல் 7 மணி வரை, பாரம்பரிய இனிப்பு தயாரிக்கும் செயல்முறை விளக்கங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுகள் உள்ளிட்ட நேரடி நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களை வரவேற்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு முதன்முறையாக, துபாயில் உள்ள நாத் அல் ஷீபா பூங்கா, ஒரு பிரத்யேக ஈத் நிகழ்வுடன் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, ஈத் பண்டிகையின் மூன்றாம் நாளில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், பாரம்பரிய ஹர்பியா நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார, பாரம்பரிய செயல்பாடுகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த மாலை நேர நிகழ்வுகள், குடும்பங்கள் குளிர்ச்சியான நேரங்களில் வெளிப்புற இடங்களை அனுபவிக்க வழிவகுப்பதுடன், ஈத் கொண்டாட்டங்களுக்கு ஒரு துடிப்பான சூழலையும் உருவாக்கும் எனவும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.