ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வசிப்பவர்கள் பல நாட்களாக பெய்த கனமழையின் பின்விளைவுகளைச் சமாளித்து வரும் நிலையில், வானிலையால் சேதமடைந்த வாகனங்களுக்காக துபாய் காவல்துறை 720 ‘To Whom It May Concern’ சான்றிதழ்களை வழங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை முதல் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களால் கோரப்பட்ட இந்தச் சான்றிதழ்கள், வாகன ஓட்டிகளுக்கு காப்பீடு மற்றும் பழுதுபார்க்கும் நடைமுறைகளில் உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது ஆகும். துபாயில் வசிப்பவர்கள் துபாய் காவல்துறை இணையதளம் அல்லது ஸ்மார்ட் செயலி மூலம், சான்றிதழ்கள் தொகுப்பின் கீழ் உள்ள “Natural Disasters” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, சேதத்தின் புகைப்படங்களைப் பதிவேற்றி கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், வாகனத்தை ஆய்வுக்காக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் சரிபார்ப்பிற்குப் பிறகு, சான்றிதழ் மின்னணு முறையில் வழங்கப்படும். இதற்கு பொதுவாக ஒரு வேலை நாளுக்குள் இந்த சான்றிதழை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய புயல்களின் தாக்கத்தைச் சமாளிக்கும் வசிப்பவர்களுக்கு இந்த செயல்முறையை எளிதாக்குவதே இந்தச் சேவையின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நான்கு நாட்கள் நீடித்த நிலையற்ற வானிலையைத் தொடர்ந்து இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், குடியிருப்பாளர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு எச்சரிக்கைகளைச் சமாளித்தனர். சில வாகனங்கள் ஜன்னல் மட்டம் வரை உயர்ந்த நீரில் சிக்கிக்கொண்டன.
மேலும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஷார்ஜா மற்றும் அஜ்மானுக்கான பேருந்து சேவைகளை நிறுத்தியது, அதே நேரத்தில் ராஸ் அல் கைமா மார்ச் 27 அன்று அரசு ஊழியர்களுக்கு தொலைதூரப் பணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு சராசரியை விட மிக அதிகமான மழைப்பொழிவு
ஒரு வார கால நிலையற்ற வானிலையின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் சில இடங்களில் மிக அதிக அளவிலான மழைப்பொழிவு காணப்பட்டது. அத்துடன் கடந்த வாரம் பெய்த மழையில் அமீரகத்தின் ஐந்து இடங்களில் தலா 226 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவானது:
ஜெபல் யனாஸ் (ராஸ் அல் கைமா) – 244 மி.மீ
மனாமா (அஜ்மான்) – 234.7 மி.மீ
அல் ஹயர் (அல் அய்ன்) – 234.1 மி.மீ
ஜெபல் மெப்ரே (ராஸ் அல் கைமா) – 229.7 மி.மீ
காதம் அல் ஷக்லா (அல் அய்ன் ) – 226.6 மி.மீ
ராஸ் அல் கைமா நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கரடுமுரடான மலை முகாம் இடமான ஜெபல் யனாஸில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவானது.
ஒப்பீட்டளவில், ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வருடத்தில் பெறும் சராசரி மழையளவு 100 மி.மீ ஆகும். அதிக அளவு மழை பெய்தபோதிலும், இந்த முறை மழை பல நாட்களாகவும் வெவ்வேறு பகுதிகளிலும் பரவி இருந்ததால், இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க ஏப்ரல் 2024 வெள்ளத்துடன் ஒப்பிடத்தக்கது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.