ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மூன்று நாட்களாக விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA), நாட்டின் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட பயணிகளை வெளியேற்ற சிறப்பு விமானங்களை இயக்க இன்று மார்ச் 2ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் ஆகிய இரு விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கப்போவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் மற்ற அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மார்ச் 2 ஆம் தேதி மாலை முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க இருப்பதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. எனினும் “முன்கூட்டியே முன்பதிவு செய்த எமிரேட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையாக இடமளிக்கப்படும்” என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வரையறுக்கப்பட்ட சிறப்பு விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை எமிரேட்ஸ் நிறுவனம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் என்பதால், தொடர்பு கொள்ளப்படாத பயணிகள் எவரும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதே போன்று, துபாயை தளமாகக் கொண்ட மற்றொரு விமான நிறுவனமான ஃப்ளைதுபாயும், மார்ச் 2, 2026 அன்று மாலையில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விமான நிறுவனம் இயக்கவிருக்கும் விமானங்களின் பட்டியலையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
எனவே விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் பயணிகள் தங்களின் பயணம் குறித்து (+971) 600 54 44 45 என்ற எண்ணில் துபாயில் உள்ள ஃப்ளைதுபாய் தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும், அதன் இணையதளத்தை பார்வையிடவும் அல்லது மறு முன்பதிவு அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பங்களுக்கு அந்தந்த பயண முகவரைத் தொடர்பு கொள்ளவும் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel