மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக வளைகுடா நாடுகள் முழுவதும் விமான பயண சேவையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே நிலவும் போரின் காரணமாக பிப்ரவரி 28 முதல் வான்வெளி மூடப்பட்டதிலிருந்து அமீரகம் உட்பட அனைத்து வளைகுடா நாடுகளிலும் விமான சேவை பாதிப்புக்குள்ளாகியது.
இத்தகைய சூழலில், துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ், துபாயிலிருந்து இயக்கப்படும் மற்றும் துபாய்க்கு செல்லும் அதன் அனைத்து விமானங்களையும், வரும் மார்ச் 7 ஆம் தேதி 23:59 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனினும், அதன் வரையறுக்கப்பட்ட சிறப்பு விமான அட்டவணையை குறிப்பிட்ட இடங்களுக்கு தொடர்ந்து இயக்குவதாகவும், தற்போது முன்னுரிமையாக முந்தைய முன்பதிவுகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இடமளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் துபாய் வழியாக பயணிக்கும் வாடிக்கையாளர்களின் இணைப்பு விமானம் இயக்கப்பட்டால் மட்டுமே, அவர்கள் சிறப்பு விமானங்களில் பயணம் செய்ய ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஷார்ஜாவை தளமாக கொண்டு இயங்கும் ஏர் அரபியா நிறுவனமும், வரும் மார்ச் 9ம் தேதி மதியம் 3 மணி வரை தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 9 வரை அமீரகத்திற்கு உள் வரும் மற்றும் வெளி செல்லும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.