ஈரான், US இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக அமெரிக்க இராணுவ தளத்தை கொண்டிருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகின்றது. அதில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து இன்றுடன் 4 வது நாளாக தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கின்றது.
இவ்வாறு தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் வான்வெளி மூடப்பட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ், ஃபிளைதுபாய், ஏர் அரேபியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சிறப்பு விமான சேவைகளை இயக்க ஆரம்பித்துள்ளன.
இதன் வரிசையில் தற்பொழுது விமான சேவை தடையின் காரணமாக விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளை மீட்கும் முயற்சியாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக இந்திய விமான நிறுவனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளன.
நாடுகளுக்கு இடையேயான செயல்பாடுகளை படிப்படியாக இயல்பாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நான்கு விமானங்களை இயக்குவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. அதேபோல ஓமான் தலைநகர் மஸ்கட்டுக்கு செவ்வாய்க்கிழமை முதல் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கான சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.