மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில மணி நேரங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகளை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எம்.பி. காலிபாஃப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாளுவதற்கும், அமெரிக்காவும் இஸ்ரேலும் சிக்கியுள்ள சகதியிலிருந்து தப்பிப்பதற்கும் இது போன்ற “போலிச் செய்திகள்” பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் ஈரான் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாள் கூறியதை மேற்கோள் காட்டி ஈரானின் IRNA ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையைத் தங்களின் நட்பு நாடுகள் அனுப்பியதாகவும், அதற்கு ஈரான் பதிலளிக்கவில்லை என்றும் IRNA குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை மற்றும் இஸ்ரேல், அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகள் குறித்த ஈரானின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியும் IRNA செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், மத்திய கிழக்கில் அமெரிக்கா அமைதியை நாடுவதாகவும், அணு ஆயுதங்கள் வேண்டாம் என அமெரிக்கா விரும்புவதாகவும், இந்த கோரிக்கைக்கு ஈரான் ஒப்புக்கொண்டதாகவும் டொனால்டு ட்ரம்ப் சில மணி நேரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். மேலும் அமெரிக்கா ஈரானுடன் வலுவான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இரு தரப்பிலும் “முக்கியமான உடன்பாடுகள்” இருந்ததாகவும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு தான் அழைக்கவில்லை என்றும், ஈரான்தான் அழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும், ஒப்பந்தம் நடந்தால் அது ஈரான் மற்றும் பிராந்தியம் ஆகிய இரண்டிற்கும் ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்ததார்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்காவுடன் எவ்வித உரையாடலும், சந்திப்பும் நடைபெறவில்லை என ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதனையும் 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel