ஈரானில் மார்ச் 8, 2026 முதல் ஈரானின் புதிய உச்ச தலைவராக (Supreme Leader) மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) பதவியேற்றுள்ளார். இவர் கடந்த வாரம் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் ஆவார். செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படும் இவர், தனது தந்தைக்குப் பிறகு இந்த உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மொஜ்தபா கமேனி இதுவரை அரசாங்கப் பதவிகள் எதிலும் வகிக்கவில்லை என்றாலும், ஆட்சி அமைப்பில் திறமையான மற்றும் சக்திவாய்ந்த நபராக அறியப்படுகிறார்.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “கவனமாகவும் விரிவான ஆய்வுகளுக்கும் பிறகு… இன்றைய அமர்வில், நிபுணர்கள் சபையின் மரியாதைக்குரிய பிரதிநிதிகளின் தீர்க்கமான வாக்கெடுப்பின் அடிப்படையில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் (Islamic Republic of Iran) புனித அமைப்பின் மூன்றாவது தலைவராக அயதுல்லா செய்யத் மொஜ்தபா ஹொசைனி கமேனி நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறார்” என்று சபை கூறியுள்ளது.
இதற்கிடையே ஈரான் மீது வலிமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஆயுதங்களை கைவிட்டு ஈரான் சரணடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து தீவிரமாக போர் புரியும் வலிமை எங்களுக்கு இருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
10 நாட்களாக நீடிக்கும் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட ஈரானிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.