துபாய் காவல்துறையானது துபாயில் ஏர்போர்ட் ஸ்ட்ரீட், ஏர்போர்ட் டன்னல் மற்றும் காசாபிளான்சா ஸ்ட்ரீட்டிற்கு செல்லும் அல் கர்ஹூத் பிரிட்ஜ் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் விமான நிலையத்தை நோக்கிய கார்கோ வில்லேஜ் மற்றும் மராகேச் ஸ்ட்ரீட் இன்டர்செக்ஷனில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. எனவே ஓட்டுநர்கள் மாற்றுப் பாதைகளில் செல்லவும், அதிகாரப்பூர்வ போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தொடர்பான தீ விபத்து ஏற்பட்டதாகக் தொடர்ந்து இந்த மூடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுநர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், மாற்று வழிகளைத் தேடவும், தாமதங்களைக் குறைக்க அதிகாரப்பூர்வ போக்குவரத்து புதுப்பிப்புகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இயல்பான போக்குவரத்து ஓட்டத்தை விரைவில் மீட்டெடுப்பதற்கும் போக்குவரத்துக் குழுக்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மூடலின் போது சுமூகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை உறுதிசெய்ய, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கவும், பொறுமையாக இருக்கவும், துபாய் காவல்துறையின் தரைவழி அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தொடர்பான சம்பவத்தில் எரிபொருள் டேங்கில் ஏற்பட்ட தீயை துபாய் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளன. இதனையடுத்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முன்னதாக அறிவித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் துபாய்க்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதன் பொருட்டு பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும், புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.