ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு கடந்த சில நாட்களாக நடத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக இடைமறித்து வருகின்றது. இது குறித்து வெளியான அறிவிப்பில், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் முழுமையாகத் தயாராக உள்ளனர் என அரசு குறிப்பிட்டுள்ளது.
அதே போல் விமான நிலையங்களில் குறிப்பிட்ட விமான நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன என்றும், அதே நேரத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வசந்த காலத்தின் துவக்க விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
விமான சேவைகளை பொறுத்த வரை கடந்த 84 மணி நேரத்தில், பயணிகள் வீடு திரும்புவதற்கு உதவுவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் (DWC) 1,140க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 2 முதல் 5 வரை, 500க்கும் மேற்பட்ட விமானங்கள் DXB மற்றும் DWC-யிலிருந்து புறப்பட்டு, 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 105,000 நபர்களுக்கு சேவைகளை வழங்கியுள்ளன என்றும், மேலும் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வியத்தகு முறையில் அதிகரித்து வருகிறது எனவும் கூறப்படுகின்றது.
மேலும் துபாய் விமான நிலையங்கள் ஒவ்வொரு நாளும் கூடுதல் விமானங்களை இயக்கி வருவதாகவும் இதனால் பயணிகள் விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானத்தின் நிலையைச் சரிபார்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.