அமீரகம் முழுவதும் கடந்த ஒரு சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்றே பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஃபுஜைராவின் டிப்பாவில் உள்ள அல் ஹலாத் பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வாகனம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதிகாரிகள் விரைந்து சென்று நடவடிக்கை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் இருந்த ஒரு வாகன ஓட்டியை ஃபுஜைரா காவல்துறை பொதுக் கட்டளைப் பிரிவு பத்திரமாக மீட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட நீர்மட்ட உயர்வால், அந்தப் பள்ளத்தாக்கு வேகமாக ஓடும் நீரோடையாக மாறியபோது, வாகன ஓட்டுநர் அதைக் கடக்க முயன்ற சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அவசரகாலக் குழுக்கள் சரியான நேரத்தில் மும்முரமாக செயல்பட்டு வாகன ஓட்டியை மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நிலையற்ற வானிலையின் போது பள்ளத்தாக்குகளை கடக்க வேண்டாம் என்று காவல்துறை வாகன ஓட்டிகளை எச்சரித்ததுடன், தேசிய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
அமீரகத்தில் கடந்த சில தினங்களாக நீடிக்கும் இந்த நிலையற்ற வானிலையாந்து வாரம் முழுவதும் நீடிக்கும் என அமீரகத்தின் தேசிய வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் அமீரகத்தில் அனைத்து எமிரேட்களிலுமே கனமழை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.