ஐக்கிய அரபு அமீரகமானது ஏவுகணை தாக்குதல்களை எதிர் கொண்டு வருவதால், அமீரக குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் அமீரகம் முழுவதும் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் சாத்தியமான ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் உடனடியாக தஞ்சம் அடைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஜன்னல்கள், கதவுகள் மற்றும் திறந்த பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தற்போது தாக்குதலுக்கு பதிலளித்து வருவதாகவும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ட்வீட் செய்துள்ளது. மேலும் மக்கள் தங்கள் தகவல்களை அதிகாரப்பூர்வ, சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெற வேண்டும் என்றும் NCEMA அழைப்பு விடுத்துள்ளது.
நடந்து வரும் தாக்குதலுக்கு மத்தியில், எச்சரிக்கை செய்தியை பெற்றால் என்ன செய்வது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டால், நீங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, அந்தப் பகுதிக்கு அடுத்த தகவல் விடுக்கப்படும் வரை பாதுகாப்பாக இடத்தில் தஞ்சம் அடைய வேண்டும் என்று விளக்கியுள்ளது. மேலும் “புகைப்படம் எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ வெளியேற வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளது.
அதே போல் எச்சரிக்கை வரும்போது நீங்கள் ஒரு காரில் இருந்தால், “அமைதியாக இருந்து உங்கள் இலக்கை நோக்கிச் செல்லுங்கள். அங்கு சென்றதும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்” என கூறப்பட்டுள்ளது.
ஈரானிய தாக்குதல்களுக்கு நாடு தொடர்ந்து பதிலளித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்பு அமைப்புகள் இன்று, (மார்ச் 5 ) மட்டுமே ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 125 ட்ரோன்களை இடைமறித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் மொத்தம் 196 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்துள்ளது.
மேலும் 1,072 ஈரானிய ட்ரோன்கள் கண்டறியப்பட்டதாகவும், 1,001 இடைமறிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் கூறியது. எழுபத்தொரு ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீரக எல்லைக்குள் விழுந்துள்ளன. அத்துடன் வான் பாதுகாப்புப் படைகள் எட்டு குரூஸ் ஏவுகணைகளையும் கண்டறிந்து அழித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.