ரமலான் மாதத்தின் இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், (மார்ச் 18) புதன்கிழமை மாலை ஷவ்வால் மாத பிறை நிலவைப் பார்க்குமாறு சவுதி உச்ச நீதிமன்றம், சவூதி முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பிறையைப் பார்ப்பவர்கள் அருகிலுள்ள நீதிமன்றத்தில் புகாரளித்து தங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும் அல்லது அருகிலுள்ள நீதிமன்றத்தை அடைவதற்கான உதவிக்கு அருகிலுள்ள நகர மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதன் படி புதன்கிழமை மாலை பிறை காணப்பட்டால், ஈத் அல் ஃபித்ர் மறுநாள் தொடங்கும்; இல்லையெனில், ரமலான் 30 நாட்களை நிறைவு செய்யும் என கூறப்படுகின்றது.
பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இந்த வருடம் ரமலான் மாதத்தின் 29 ம் நாள் மார்ச் 18 புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய இரவில் பிறை காணப்பட்டால், மார்ச் 19 ம் தேதி வியாழக்கிழமை ஈத் அல் ஃபித்ர் பண்டிகையின் முதல் நாளாக இருக்கும்.
ஒருவேளை அன்று பிறை தென்படவில்லை என்றால், மார்ச் 20ம் தேதி வெள்ளிக்கிழமை, ஈத் அல் ஃபிதரின் முதல் நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து சாட்சியங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஈத் தொடங்குவது குறித்த இறுதி முடிவை உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.