அமீரகம் முழுவதும் இன்று (மார்ச் 23) கனமழை மற்றும் நிலையற்ற வானிலை நிலவி வருகின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஷார்ஜா இலவச வாகன பார்கிங்கை அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் ஐக்கிய அரபு அமீரகம் நிலையற்ற வானிலையை எதிர்கொள்வதால், வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப கட்டண வாகன நிறுத்துமிட சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.
மேலும் நீல நிற தகவல் பலகைகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, வாரம் முழுவதும் மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும் பகுதிகள் உட்பட, ஷார்ஜா முழுவதும் உள்ள அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களுக்கும் இந்தக் கட்டண வாகன நிறுத்துமிட விலக்கு பொருந்தும் எனவும் விளக்கமளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வார காலத்திற்கு நிலையற்ற வானிலையை எதிர்கொள்ளும் என்று அறிவித்திருந்த தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), ஞாயிறு முதல் வெள்ளி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என கணித்துள்ளது. மழைப்பொழிவு வடக்கு, கிழக்கு, தெற்கு, கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் மாறி மாறி பெய்யும் என்றும், ஒவ்வொரு நாளும் மழையின் அளவு மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பொதுப் பாதுகாப்பே முன்னுரிமை என்றும், வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், குறிப்பாகப் பார்வைத் தெளிவு குறைவாக இருக்கும்போதும், சாலைகளில் நீர் தேங்கியிருக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும், மோசமான வானிலை காரணமாக இந்த வாரம் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன; மேலும் சில நிறுவனங்கள், புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே வந்து சேருமாறும் அறிவுறுத்தியுள்ளன.