ஷார்ஜாவில் தொடர்ந்து நிலையற்ற வானிலை நிலவி வருவதால், பொது வாகன நிறுத்துமிடங்களில் அறிவிக்கப்பட்ட கட்டண விலக்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக ஷார்ஜா அறிவித்துள்ளது.
இந்த நீட்டிப்பு, மார்ச் 23 அன்று செயல்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடக் கட்டண விலக்கின் தொடர்ச்சியாகும். இதன் மூலம் சார்ஜாவில் உள்ள அனைத்து பார்க்கிங் இடங்களிலும் வாகன ஓட்டிகள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் இலவசமாக பார்க்கிங் செய்யலாம்.
இந்த விலக்கு, ஷார்ஜா எமிரேட்டில் முழுவதும் உள்ள அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களுக்கும் பொருந்தும் என்றும், நீல நிற அடையாளங்களால் குறிக்கப்பட்டுள்ள, பொதுவாகக் கட்டணம் வசூலிக்கப்படும் பகுதிகளும் இதில் அடங்கும் என்றும் ஷார்ஜா நகர நகராட்சி மேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வாரத்திற்கு நிலையற்ற வானிலையை எதிர்கொள்ளும் என்றும் ஞாயிறு முதல் வெள்ளி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்துள்ளது. அதே போல் மழைப்பொழிவு வடக்கு, கிழக்கு, தெற்கு, கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் மாறி மாறிப் பெய்யும், மேலும் ஒவ்வொரு நாளும் மழையின் அளவு மாறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் சாலைகளில் தெரிவுத்திறன் (visibility) குறைவாக இருக்கும்போதும், சாலைகளில் நீர் தேங்கியிருக்கும்போதும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.