ADVERTISEMENT

அமீரகத்தில் அதிகளவு மழை பெய்த இடங்களின் விபரங்களை வெளியிட்ட வானிலை மையம்..

Published: 26 Mar 2026, 9:15 PM |
Updated: 26 Mar 2026, 9:17 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான மழையையும் வேகமான காற்றையும் கடந்த சில தினங்களாக அனுபவித்து வருகின்றது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மழைநீர் குறிப்பாக மலை பகுதிகளில் வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழை என பல்வேறு கோணங்களில் வானிலை மாற்றம் நிலவிக்கொண்டிருக்கின்றது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் படி (NCM), வெள்ளிக்கிழமை வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (மார்ச் 25, புதன்கிழமை) அதிகளவு பதிவான முதல் ஐந்து இடங்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை

  • அல் தாவியன் 47.9 மி.மீ.,
  • அல் மர்ஜான் 39.7 மி.மீ.,
  • கோர் ஃபக்கான் 33.3 மி.மீ.,
  • கதம் அல் ஷக்லா 31.6 மி.மீ.,
  • கோர் ஃபக்கான் போர்ட் 28.3 மி.மீ.

செவ்வாய்க்கிழமை முதல் அபுதாபியின் தாஸ் தீவிலும் 47.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, இது மழையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளனர். மேலும், ஷார்ஜாவில் தேங்கி நிற்கும் மழைநீரைச் சுத்திகரிக்க பெரிய அளவிலான கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.

ஷார்ஜாவில் ஸ்மார்ட் பார்க்கிங் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பொது வாகன நிறுத்துமிடங்கள் இலவசமாகவே இருந்தன. அதே நேரத்தில், குறைந்த பார்வைத் திறன் காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமும் (RTA) அபுதாபி காவல்துறையும் அறிவுறுத்தின.

ADVERTISEMENT

குறிப்பாக அஜ்மானில், சில பகுதிகளில் புயல்களால் சேதம் ஏற்பட்டது; மரங்கள் வேரோடு சாய்ந்து கார்கள் மீது விழுந்தன. திடீரெனப் பெய்த பெருமழைக்கு மத்தியில், தெருக்களைச் சுத்தம் செய்யவும் பாதுகாப்பைப் பேணவும் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்தனர். மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் மோசமான வானிலை தொடர்வதால், பயணிகள் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வருமாறு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் மழை நீர் ஆங்காங்கே தேங்கியிருப்பதால் துபாயில் இருந்து அஜ்மான் மற்றும் ஷார்ஜா செல்லும் பேருந்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மழைக்காலங்களில் பள்ளத்தாக்குகளை தவிர்க்கவும், குறைந்த பார்வைத்திறனில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், நீர் தேக்கங்கள் அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தி, அதிகாரிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.