ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.49 மணிக்கு, ஈரானில் இருந்து வரும் அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தொடர் தாக்குதலை வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டதாக அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்து அமைச்சகம் உறுதியளித்ததுடன் நாட்டின் பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முழு தயார்நிலையில் இருப்பதாகவும் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சமயத்தில் சில குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

மேலும் அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் இருக்கவும், எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ சேனல்களைப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிப்.28 முதல் ஈரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து, அமீரகத்தை நோக்கி ஏவப்பட்ட 174 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 161 ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 13 ஏவுகணைகள் கடலில் விழுந்தமாக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கூடுதலாக, 689 ஈரானிய ட்ரோன்கள் இதுவரையிலும் கண்டறியப்பட்டு, அதில் 645 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 44 ட்ரோன்கள் நாட்டின் எல்லைக்குள் விழுந்தது. மேலும், 8 க்ரூஸ் ஏவுகணைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலினால் இதுவரை 3 பேர் உயிரிழந்ததுடன், 68 பேர் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.