ஐக்கிய அரபு அமீரகமானது மார்ச் 22, 2026 அன்று, ஈரானிலிருந்து ஏவப்பட்ட நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 25 ட்ரோன்களையும் அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்தன என தகவல் வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமீரகத்தின் மீதான ஈரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 345 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 15 குரூஸ் ஏவுகணைகளையும், 1,773 ட்ரோன்களையும் இடைமறித்துள்ளன என கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் விளைவாக, பணியில் இருந்த ஆயுதப் படைகளின் இரண்டு உறுப்பினர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாலஸ்தீன நாடுகளைச் சேர்ந்த ஆறு பொதுமக்கள் உயிரிழந்தனர்.
அத்துடன் மொத்தம் 160 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் லேசான காயம் முதல் கடுமையான காயம் வரை உள்ளது. காயமடைந்தவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சூடான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா, வங்கதேசம், இலங்கை, அஜர்பைஜான், யேமன், உகாண்டா, எரித்திரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொமோரோஸ், துருக்கி, ஈராக், நேபாளம், நைஜீரியா, ஓமன், ஜோர்டான், பாலஸ்தீனம், கானா, இந்தோனேசியா, ஸ்வீடன் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், நாட்டின் இறையாண்மை, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் முயற்சிகளை உறுதியாக முறியடிப்போம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.