ADVERTISEMENT

ஈரான் தாக்குதல் எதிரொலி: முன்கூட்டியே வசந்த கால விடுமுறை அறிவித்த அமீரகம்..

Published: 5 Mar 2026, 5:29 AM |
Updated: 5 Mar 2026, 5:29 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசனது, நாட்டில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வசந்த கால விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி அமீரகத்தின் கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வசந்த கால விடுமுறை (spring break) வரும் மார்ச் 9 திங்கள் முதல் மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கும் என்று அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

பொது மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் வகுப்புகள் வரும் மார்ச் 23 திங்கள் அன்று மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் கல்வி, மனித மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் (EHCD) ஒப்புதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளி நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. அந்த 2025–2026 கல்வியாண்டிற்கான அதிகாரப்பூர்வ பள்ளி நாட்காட்டியின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், முன்னர் அங்கீகரிக்கப்பட்ட வசந்த கால விடுமுறை மார்ச் 16 முதல் 29 வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அமீரகம் மீதான ஈரானிய தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த புதிய முடிவின் மூலம், மாணவர்கள் இந்த வார இறுதியில் தங்கள் ஆன்லைன் வகுப்புகளை முடித்துக்கொண்டதோடு வசந்த கால விடுமுறை ஆரம்பமாகின்றது.

செவ்வாயன்று, கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் நாடு முழுவதும் தொலைதூரக் கற்றலை மார்ச் 6 வெள்ளிக்கிழமை வரை நீட்டித்துள்ளன, மேலும் கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்ச்சியான மதிப்பீட்டு கட்டமைப்புகளின் கீழ் தொலைதூரக் கற்றல் தொடர வேண்டும் என்றும் அரசாங்கம் விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

அதாவது மாணவர் சமூகத்திற்கு பாதுகாப்பான சூழலில் கல்வி செயல்முறை தொடர வேண்டும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து கூறுகையில், “தொலைதூரக் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவர்கள் அனைத்து தரங்களிலும் தங்கள் கல்விப் பயணத்தில் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்கிறோம்” என்று தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தஹேரி, அரசாங்க ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.