அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கணிப்பின்படி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வசிப்பவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு நிலையற்ற வானிலையை எதிர்பார்க்கலாம். ஏனெனில், வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் மழை, இடி மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
NCM வெளியிட்ட மார்ச் 21 முதல் மார்ச் 27 வரையிலான சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில், மேற்கு பகுதியிலிருந்து அமீரகத்தை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால், நாடு வளிமண்டல நிலையற்ற தன்மையால் பாதிக்கப்படும் என்று தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலைமைகள் பல்வேறு பிராந்தியங்களில் வெப்பச்சலன மேக உருவாக்கத்தைத் தூண்டி, வெவ்வேறு இடைவெளிகளில் லேசானது முதல் கனமழை வரை மாறுபட்ட தீவிரத்துடன் நாட்டின் பல பகுதிகளில் மழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் என்றும், குறிப்பிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அமீரகத்தின் தேசிய வானிலை மையம் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.
முன்னறிவிப்பின்படி, வார இறுதியில் மழைப்பொழிவு தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், சனிக்கிழமையன்று ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பகல் நேரங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களிலும், அல் அய்னிலும் இந்த மழை சில நேரங்களில் கனமழையாக மாறக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. வெப்பச்சலன மேகங்கள், குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், அல் அய்னிலும் மாறுபட்ட தீவிரத்துடன் மழையைக் கொண்டுவரும்.
அடுத்ததாக, வாரத்தின் தொடக்கத்திலும் நிலையற்ற வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் பரவி, பல்வேறு அளவுகளில் மழைப்பொழிவு தொடரும்.
புதன்கிழமை மேகமூட்டம் தொடர்ந்து நீடிக்கும். நாட்டின் சில வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் சற்றே குறைந்தாலும், வானிலை தொடர்ந்து மேகமூட்டமாகவே இருக்கும். வியாழன் முதல் சனிக்கிழமை வரை, ஆங்காங்கே வெப்பச்சலன மேகச் செயல்பாடு மீண்டும் உருவாகி, மாறுபட்ட தீவிரத்துடன் விட்டுவிட்டு மழையைப் பொழிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து வருமாறும், கனமழை காலங்களில், குறிப்பாகப் பார்வைத் தெளிவு குறைவதற்கும் சாலைகளில் நீர் தேங்குவதற்கும் வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேசிய வானிலை மையம் (NCM) குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel