அபுதாபியில் உள்ள முசாஃபா பகுதிக்கு அருகில் உள்ள ICAD சிட்டியில் உள்ள, ரனீன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மீது ஏவுகணை பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாகத் தாக்கியதன் விளைவாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அபுதாபி ஊடக அலுவலகம் உறுதிப்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தின் விளைவாக கானா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
நேற்று (ஏப்ரல் 5), வெற்றிகரமான வான் பாதுகாப்பு அமைப்பின் தாக்குதலால் சிதறிய பாகங்களால் போரூஜ் பெட்ரோகெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட பல தீ விபத்துகளுக்கும் அபுதாபி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் சேத மதிப்பீடு முடியும் வரை தொழிற்சாலையின் செயல்பாடுகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.