அமெரிக்க, இஸ்ரேல்- ஈரான் இடையே கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் ஈரானில் உள்ள பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்த நிலையில் குண்டுவீச்சு மற்றும் பிற தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த இடைநிறுத்தத்தை, தெஹ்ரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையை திறப்பதைப் பொறுத்து அமையும் ஒரு “இருதரப்பு போர்நிறுத்தம்” என்று அவர் விவரித்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த காலக்கெடு முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் அறிவித்த இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தில் பங்கேற்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
கடந்த பிப்ரவரியில் மோதல் தொடங்கியதிலிருந்து, டிரம்ப் பலமுறை பதற்றத்தை அதிகரிக்கும் காலக்கெடுவை அறிவித்து, அவை முடிவடைவதற்குச் சற்று முன்பு அவற்றை ரத்து செய்தோ அல்லது தாமதப்படுத்தியோ வருகிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தனது சமூக ஊடகப் பதிவில் தற்போது அறிவித்த அறிக்கை குறித்த முழுவிபரங்களை கீழே காணலாம்.
“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கான தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.”
“இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக இருக்கும்!” இவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவென்றால், நாம் ஏற்கனவே அனைத்து இராணுவ இலக்குகளையும் அடைந்து, அவற்றையும் தாண்டிவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம்”.
“ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவை நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது ஒரு நடைமுறைக்கு உகந்த அடிப்படை என்று நம்புகிறோம். கடந்தகால கருத்து வேறுபாடுகளுக்குரிய பல்வேறு கருத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏறக்குறைய ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இந்த உடன்படிக்கையை இறுதி செய்து நிறைவு செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும்”.
“அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சார்பாக, ஜனாதிபதி என்ற முறையிலும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகாலப் பிரச்சினை ஒரு தீர்வின் அருகில் இருப்பது ஒரு பெருமையாகும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.