ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இன்று (ஏப்ரல் 3) ஈரானிலிருந்து ஏவப்பட்ட 18 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 47 ட்ரோன்களை இடைமறித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரானின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் 475 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 23 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,085 ட்ரோன்களை இடைமறித்துள்ளன
இந்தத் தாக்குதல்களால் பணியில் இருந்தபோது ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இராணுவத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஒரு மொராக்கோ குடிமகனும், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், பாலஸ்தீனம் மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த 9 குடிமக்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் எமிராட்டி, எகிப்து, சூடான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்திய, பங்களாதேஷிய, இலங்கை, அஜர்பைஜான், யேமன், உகாண்டா, எரித்திரிய, லெபனான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொமோரியோ, துருக்கி, ஈராக், நேபாளம், நைஜீரியா, ஓமன், ஜோர்டான், பாலஸ்தீனம், கானா, இந்தோனேசியா, ஸ்வீடன் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 203 பேர், லேசானது முதல் மிதமானது மற்றும் கடுமையானது வரையிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்கவும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதையும், அதன் நலன்களையும் தேசியத் திறன்களையும் பாதுகாப்பதையும் உறுதிசெய்யும் வகையில், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அனைத்தையும் உறுதியாக முறியடிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் உயர் எச்சரிக்கை நிலையிலும் தயார் நிலையிலும் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.