ADVERTISEMENT

அமீரகத்தில் 4 நாட்களுக்கு குளிர்ந்த வானிலை: மேகமூட்டம், இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என NCM எச்சரிக்கை!

Published: 23 Jun 2026, 3:06 PM |
Updated: 23 Jun 2026, 3:06 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து குடியிருப்பாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த வாரம் சில பகுதிகளில் மழை பெய்வதற்கும், வார இறுதியில் வெப்பநிலையில் சற்று குறைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக NCM வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி, நாடு பாரம்பரிய “ரவாயே” (Rawayeh) பருவத்திற்குள் நுழைகிறது. இப்பருவத்தில் வெப்பச்சலன மேகங்கள் (convective clouds) உருவாகி, குறிப்பாக கிழக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ளூர் அளவில் மழையையும் இடியுடன் கூடிய மழையையும் கொண்டுவரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது நாட்டின் மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு பகுதிகளில் மேகங்கள் உருவாகக்கூடும். இந்த நிலையற்ற வானிலை புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தொடர வாய்ப்புள்ளது, இதனால் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த வாரம் கிழக்கு பகுதிகளில் அதிகபட்ச மழைப்பொழிவுக்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஃபுஜைரா (Fujairah), கோர் ஃபக்கான் (Khor Fakkan), கல்பா (Kalba) மற்றும் மசாஃபி (Masafi) போன்ற பகுதிகளில் மதிய வேளையில் மேகமூட்டம் மற்றும் ஆங்காங்கே மழை பெய்யலாம்; அதே சமயம் மேற்கு கடற்கரையில் உள்ள அல் தஃப்ரா (Al Dhafra) பகுதிகள் முதலில் மழையை அனுபவிக்கும் இடங்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை மாற்றம் வருடாந்திர ‘ரவாயே’ பருவத்துடன் தொடர்புடையது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பருவத்தில், உயரும் வெப்பநிலையானது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்துடன் இணைந்து, மழையைத் தரக்கூடிய பிரம்மாண்டமான இடி மேகங்களை உருவாக்குகிறது. நாடு முஹுவதும் பரவலான மழை எதிர்பார்க்கப்படாவிட்டாலும், மேகங்களின் செயல்பாட்டைப் பொறுத்து சில பகுதிகளில் மற்ற இடங்களை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மழையுடன் சேர்த்து, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், குறிப்பாக மேற்கு கடற்கரை மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது செவ்வாய் முதல் வியாழன் வரையிலான காலை வேளைகளில் சில இடங்களில் மூடுபனி அல்லது பனிமூட்டம் உருவாக வழிவகுக்கலாம்.

வரும் நாட்களில் காற்று லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சில சமயங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்றும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இது மணிக்கு 40 கி.மீ வேகம் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று வீசும் தீவிரமான வடமேற்கு காற்று நாட்டின் மேற்கு பகுதிகளில் தூசு மற்றும் மணலைக் கிளப்பக்கூடும், இதனால் திறந்தவெளிகளில் பார்வைத்திறன் குறையலாம் என்று NCM தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாரத்தின் இறுதியில், குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெப்பநிலை சற்று குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது சமீபத்திய தீவிர வெப்பத்திற்குப் பிறகு சற்று நிம்மதியை அளிக்கும்.

ஐக்கிய அரபு அமீரகம் வானியல் ரீதியான கோடைக்காலத்தில் நுழைந்த சிறிது காலத்திலேயே இந்த வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பருவம் ஆகஸ்ட் மாதத் தொடக்கம் வரை வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக்கால வெப்பம் தொடர்ந்து நிலவினாலும், ஹஜார் மலைத்தொடர் மற்றும் கிழக்குப்பகுதி பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் மேகமூட்டம் காரணமாக மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் சிறிது நேரத்திற்குக் குளிர்ந்த வானிலை நிலவக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று அல்லது பார்வைத்திறன் குறைதல் போன்ற சூழல்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel