மீண்டும் தீவிரமடைந்து வரும் ஈரான்-அமெரிக்க மோதல், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. முக்கியமான உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தனது இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஈரானிய குரூஸ் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு இந்தியக் கப்பல் பணியாளர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில், அமீரகக் கொடியுடன் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஈரானிய ஏவுகணைகளால் (cruise missiles) தாக்கப்பட்டதாகவும், இதில் ஒரு இந்தியக் கப்பல் ஊழியர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் உள்ள ஓமன் நாட்டுக்குச் சொந்தமான கடல் எல்லைப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ’மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) ஆகிய கப்பல்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் தகவலின்படி, ‘மொம்பாசா’ கப்பலில் இருந்த இந்திய ஊழியர் ஒருவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். இவர்களில் ஆறு இந்தியர்களும், இரண்டு உக்ரைன் நாட்டவர்களும் அடங்குவர். காயமடைந்தவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகம் கப்பல்கள் மீதான தாக்குதலில் இந்தியக் கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தது. மேலும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தெரிவித்தது. அதேசமயம், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அது தெளிவுபடுத்தியது.
மேலும், இந்த தாக்குதலில் கப்பல்களில் தீப்பிடித்ததால் இரண்டு கப்பல்களுக்கும் பொருள் சேதம் ஏற்பட்டதாக அமைச்சகம் கூறியது. தற்போது இரண்டு கப்பல்களிலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், பதற்றத்தை அதிகரிக்கும் இச்செயலுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமையைத் தான் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
“இந்தத் தீவிரமடையும் சூழலுக்குப் பதிலடி கொடுக்கவும், தனது நிலப்பரப்பு, மக்கள் மற்றும் அங்கு வசிப்பவர்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் அரசுக்கு முழு உரிமை உள்ளது,” என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 7, 2026 முதல் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சமீபத்திய தாக்குதல் அமீரகம் உட்பட மத்தியக்கிழக்கு நாடுகளில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel