ADVERTISEMENT

துபாயில் 2 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான புதிய சாலைத் திட்டம்: 2028-க்குள் பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் என RTA தகவல்!!

Published: 13 Jul 2026, 8:27 AM |
Updated: 13 Jul 2026, 8:27 AM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பயண நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மற்றும் அமீரகத்தின் முக்கியப் பகுதிகளுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தவும் 2 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சுமார் 12 கிலோமீட்டர் நீளமுள்ள லத்தீஃபா பின்ட் ஹம்தான் (Latifa bint Hamdan) வழித்தட மேம்பாட்டுத் திட்டம், ஷேக் சையத் சாலை, அல் கைல் சாலை, அல் மேதான் ஸ்ட்ரீட், ஷேக் முகமது பின் சையத் சாலை, ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் மற்றும் எமிரேட்ஸ் சாலை ஆகியவற்றை இணைக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டம் 2028-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் நிறைவடைந்ததும், இந்த வழித்தடம் 6,50,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பயன்படும் வகையிலும், தினமும் 1,30,000-க்கும் மேற்பட்ட வாகனப் பயணங்களைக் கையாளும் வகையிலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பயண நேரம் 54% குறையும்

இத்திட்டத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, உம் அல் ஷீஃப் (Umm Al Sheif) ஸ்ட்ரீட் மற்றும் எமிரேட்ஸ் சாலைக்கு இடையிலான பயண நேரத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகும். ஏனெனில், இவற்றுக்கு இடையேயான பயண நேரம் 33 நிமிடங்களிலிருந்து வெறும் 15 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வழித்தடம் துபாயின் கிழக்கு-மேற்கு சாலை கட்டமைப்பின் கொள்ளளவை 12 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் அல் கைல் சாலை, துபாய்-அல் அய்ன் சாலை, உம் சுகீம் (Umm Suqeim) ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஓட்டம் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஏழு பாலங்கள் மற்றும் எட்டு சுரங்கப்பாதைகள்

RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இத்திட்டத்தில் 15 வெவ்வேறு நிலைகளில் அமைந்த கட்டமைப்புகள் (grade-separated structures) அடங்கும், அவை பின்வருமாறு:

  • 2.3 கி.மீ நீளமுள்ள ஏழு பாலங்கள்
  • 900 மீட்டர் நீளமுள்ள எட்டு சுரங்கப்பாதைகள்

அதுமட்டுமில்லாமல், லத்தீஃபா பின்ட் ஹம்தான் ஸ்ட்ரீட் ஒவ்வொரு திசையிலும் நான்கு வழித்தடங்களாக (lanes) விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் இந்த வழித்தடம் இரு திசைகளிலும் மணிக்கு சுமார் 16,000 வாகனங்களைக் கையாளும் திறன் பெறும் என்று RTA கூறியுள்ளது.

மேலும், அல் கைல் சாலையை லத்தீஃபா பின்ட் ஹம்தான் ஸ்ட்ரீட்டின் நீட்டிப்புப் பகுதியுடன் இணைக்கும் புதிய சாலையை RTA அமைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, அல் மெய்டன் ஸ்ட்ரீட்டின் சில பகுதிகளை மேம்படுத்தி, சுற்றியுள்ள பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்த ஒரு புதிய இணைப்புச் சந்திப்பை (interchange) உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அல் குத்ரா முதல் ஜுமைரா வரையிலான தற்போதைய மிதிவண்டிப் பாதையை இணைக்கும் வகையில், 12.5 கி.மீ. நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் உருவாக்கப்படும் என்று RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து RTA-வின் தலைமை இயக்குநரும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தார் அல் டாயர் அவர்கள் பேசுகையில், எதிர்காலத் தேவைகளுக்கு முன்னதாகவே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் துபாயின் உத்தியை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், சாலைப் பாதையை விரிவுபடுத்துவது, அமீரகத்தின் விரைவான நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது என்றும், உலகளாவிய முதலீட்டுத் தலமாக துபாயின் நிலையை வலுப்படுத்துகிறது என்றும், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

இந்தத் திட்டம், துபாய் பொருளாதார செயல்திட்டம் D33 மற்றும் துபாய் 2040 நகர்ப்புற பெருந்திட்டம் ஆகியவற்றின் இலக்குகளுடன் ஒத்துப்போகிறது என்றும், அதே நேரத்தில் அமீரகத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துகிறது என்றும் அல் டாயர் மேலும் எடுத்துரைத்துள்ளார்.

பயனடையவிருக்கும் சமூகங்கள்

இந்தப் புதிய வழித்தடம், பின்வரும் பல பழமையான மற்றும் வளர்ந்து வரும் சமூகங்களுக்குப் பயணம் செய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் அணுகலை மேம்படுத்தும் என்று RTA தெரிவித்துள்ளது:

  • நத் அல் ஷெபா
  • அல் பராரி
  • துபாய் ஹில்ஸ்
  • துபாய் டிஸ்ட்ரிக்ட் ஒன்
  • முகமது பின் ரஷீத் கார்டன்ஸ்
  • லிவிங் லெஜண்ட்ஸ்
  • மஜான்
  • குளோபல் வில்லேஜ்
  • லத்தீஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட் மற்றும் அல் மெய்தான் உள்ள குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறைப் பகுதிகள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel