ADVERTISEMENT

துபாயில் தானியங்கி டாக்ஸி சோதனை: E611 சாலையில் சில வழித்தடங்கள், அல் மக்தூம் விமான நிலைய சுரங்கப்பாதை மூடல் அறிவிப்பு!

Published: 26 Oct 2026, 10:52 AM |
Updated: 26 Oct 2026, 10:52 AM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தானியங்கி டாக்ஸி சோதனையை நடத்துவதற்காக முக்கிய சாலைகளில் தற்காலிக மூடல்களை அறிவித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அடுத்த சில நாட்களுக்கு தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கும்.

ADVERTISEMENT

இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு எதிரே உள்ள எமிரேட்ஸ் சாலையில் (E611) மூன்று பாதைகள் சோதனை நடவடிக்கைகளின் போது மூடப்படும். அதேசமயம், அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய சுரங்கப்பாதை முழுவதும் இரு திசைகளிலும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மூடல்கள் அக்டோபர் 26 முதல் 31 வரை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, மூடல் காலத்தில் சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய, வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, வழிகாட்டும் பலகைகளைப் பின்பற்றுமாறு RTA வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தனது தானியங்கி போக்குவரத்து வலையமைப்பை கணிசமாக விரிவுபடுத்தத் தயாராகி வரும் வேளையில் இந்த சாலை மூடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அடுத்த ஆண்டு நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட தானியங்கி டாக்ஸிகள் மற்றும் டெலிவரி வேன்கள் இயக்கப்படும் என்றும், அந்த வாகனங்களுக்கு ஏற்கனவே ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

அந்த வகையில், ஓட்டுநர் இல்லாத வாகனப் போக்குவரத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாயும் அபுதாபியும் வணிகரீதியான தானியங்கி டாக்ஸி சேவைகளைத் தொடங்கியுள்ளன.

துபாய், உம் சுகீம் மற்றும் ஜுமைரா உள்ளிட்ட பகுதிகளில் வணிகரீதியான தானியங்கி டாக்ஸி சேவைகளைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், அபுதாபி இந்த ஆண்டின் தொடக்கத்தில் யாஸ் தீவில் லெவல் 4 தானியங்கி டாக்ஸி சேவைகளை விரிவுபடுத்தியது.

அபுதாபி மொபிலிட்டியின் கூற்றுப்படி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் முழுமையாக ஓட்டுநர் இல்லாத லெவல் 4 வாகனங்களின் வணிகரீதியான செயல்பாடுகளைத் தொடங்கிய முதல் நகரம் அபுதாபி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel