ADVERTISEMENT

அமீரகத்தில் துர்நாற்றத்திற்குக் காரணமான எண்ணெய்க் கசிவு: உம் அல் குவைன் கடற்கரைகள் தற்காலிகமாக மூடல்!!

Published: 23 Oct 2026, 4:48 PM |
Updated: 23 Oct 2026, 4:48 PM |
Posted By: Menaka

ஷார்ஜா, அஜ்மான் மற்றும் உம் அல் குவைன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழக்கத்திற்கு மாறான வாசனையை உணர்ந்ததாக புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஒரு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதையும், அது உம் அல் குவைன் கடற்கரைப் பகுதிகளைப் பாதித்துள்ளதையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MOCCAE) உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தற்போது, பாதிப்பின் அளவை மதிப்பிடவும், தேவையான பாதுகாப்பு மற்றும் கடல்சார் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அந்த எமிரேட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளும் கடலோரப் பகுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் வாசனையால் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகளின் கூற்றுப்படி, எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டவுடன், மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி, எண்ணெயைச் அகற்றும் பணிகளைத் தொடங்கினர். தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள், உள்ளூர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், பாதிப்பின் அளவைத் தீர்மானிக்கவும், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, மீனவர்கள் மற்றும் கடலைப் பயன்படுத்தும் பிற நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடிப்பதைத் தவிர்க்குமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேசமயம், கடலோரப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அமைச்சகம் வழங்கும் அவ்வப்போதைய அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel