கேரளாவைச் சேர்ந்த ஒருவர், தெலங்கானாவில் வசிக்கும் தனது முன்னாள் அறை நண்பரைக் கண்டுபிடித்து, மூன்று தசாப்தங்களுக்கு முன்பு அவரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவின் அப்கைக் (Abqaiq) பகுதியில் தனது அறைத்தோழரான எட்லா லச்சன்னாவுடன் இணைந்து பணியாற்றியபோது, அவரிடமிருந்து 120 சவுதி ரியால்களைக் கடனாகப் பெற்றிருந்தார். அக்காலத்தில் அந்தத் தொகை ஏறக்குறைய 1,000 ரூபாய்க்கு சமமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இஸ்மாயில் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பே லச்சன்னா இந்தியா திரும்பிவிட்டார். அக்காலத்தில் மொபைல் மற்றும் மின்னஞ்சல் வசதிகள் பரவலாக இல்லாததால், இருவருக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகள் கடந்தாலும், இஸ்மாயில் அந்தக் கடனை மறக்கவில்லை. சமீபத்தில், தனது பழைய நண்பரைக் கண்டுபிடித்து கடனைத் திருப்பிச் செலுத்த அவர் முடிவு செய்திருக்கிறார். லச்சன்னா தர்மபுரியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே தெரிந்திருந்த நிலையில், கூகுள் உதவியுடன் கேரளாவிலிருந்து ஹைதராபாத் வழியாக தெலங்கானாவின் தர்மபுரிக்கு அவர் பயணம் செய்துள்ளார். பலரிடம் விசாரித்த பிறகு, இறுதியாகத் தனது நண்பரின் வீட்டைக் கண்டுபிடித்தார்.
இஸ்மாயிலின் நேர்மையைக் கண்டு அவரது குடும்பத்தினர் ஆச்சரியமடைந்ததாக லச்சன்னாவின் மகன் அபிலாஷ் தெரிவித்துள்ளார்.
“என் தந்தையிடமிருந்து அவர் பணத்தைக் கடனாகப் பெற்றபோது நான் இன்னும் பிறக்கவே இல்லை,” என்றும் அவர் கூறினார். அந்தக் குடும்பத்தினர் தற்போது சவுதி அரேபியாவில் இருக்கும் லச்சன்னாவை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட போது, அவர் உடனடியாகத் தனது முன்னாள் அறைத்தோழரை நினைவுகூர்ந்தார். ஆனால் 1991-ல் அவருக்குக் கொடுத்த அந்தச் சிறிய கடன் பற்றிய விவரத்தை முற்றிலும் மறந்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லச்சன்னா, சவுதி அரேபியாவில் அவர்கள் ஒன்றாகக் கழித்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
“நாங்கள் இருவரும் அப்கைக்கில் வசித்தோம். தினமும் மாலையில் சமைத்து ஒன்றாகச் சாப்பிடுவோம். அப்படித்தான் எங்கள் நட்பு வளர்ந்தது. நான் அவருக்கு 120 ரியால்களைக் கடனாகக் கொடுத்தேன், ஆனால் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதுபற்றி நான் முற்றிலும் மறந்துவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அசல் தொகையை விட மிக அதிகமான தொகையான 25,000 ரூபாயை இஸ்மாயில் திருப்பிச் செலுத்தியது தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாக லச்சன்னா குறிப்பிட்டுள்ளார்.
“அந்த 120 ரியால்களுக்கு அவர் எப்படி 25,000 ரூபாயைக் கணக்கிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மிகவும் நேர்மையான மற்றும் நல்ல மனிதர். இந்தப் பணம் எங்கள் நட்பின் வெளிப்பாடு மட்டுமே,” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, லச்சன்னாவின் மனைவி கங்கவ்வா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருடன் இஸ்மாயில் மதிய உணவு சாப்பிட்டு புறப்பட்டுள்ளார். இதன் மூலம், ஒரு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகத் தொடங்கிய பயணம், 35 ஆண்டுகளுக்குப் பிறகான ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பாக மாறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel