ADVERTISEMENT

துபாயில் 290 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் சென்று வீடியோ வெளியிட்ட பைக் ஓட்டுநர் கைது!! 50,000 திர்ஹம் அபராதம் விதித்த காவல்துறை…

Published: 8 Aug 2026, 5:44 PM |
Updated: 8 Aug 2026, 5:49 PM |
Posted By: Menaka

துபாய் சாலையில் ஆபத்தான சாகசங்களைச் செய்துகொண்டும் மணிக்கு 290 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் சென்ற பைக் ஓட்டுநரை துபாய் காவல்துறை அதிரடியாகக் கைது செய்ததுடன் கடும் அபராதம் விதித்துள்ளது.

ADVERTISEMENT

இணையத்தில் வெளியான வீடியோ காட்சிகள் மூலம், சிறப்பு போக்குவரத்து ரோந்துப் பிரிவினர் அந்த ஓட்டுநரைக் கண்டுபிடித்தாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பொதுப் போக்குவரத்துத் துறையின் (General Department of Traffic) பொறுப்பு இயக்குநரான பிரிகேடியர் ஜுமா சலீம் பின் சுவைதான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட அந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஓட்டுநர் மீது மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பொருந்தக்கூடிய பிற சட்ட நடைமுறைகளுக்கு மேலதிகமாக, 50,000 திர்ஹம் பறிமுதல் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே அந்த பைக்கை விடுவிக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய அதீத வேகத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தான போக்குவரத்து நடத்தைகளில் ஒன்று என்று விவரித்த அந்த அதிகாரி, மணிக்கு 290 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் செல்வது, பைக்கைக் கட்டுப்படுத்தும் திறனையும், திடீர் சாலை ஆபத்துகளுக்கு எதிர்வினையாற்றும் அல்லது பாதுகாப்பாக நிறுத்தும் திறனையும் வெகுவாகக் குறைக்கிறது என்று எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அத்தகைய வேகத்தில் கட்டுப்பாட்டை இழக்கும்போது, ​​ஓட்டுநர் வெகுதூரம் தூக்கி வீசப்படலாம். இதனால் தடுப்புகள், மின்விளக்குக் கம்பங்கள் அல்லது நடைபாதை விளிம்புகளில் மோதவோ அல்லது பைக் எதிரே வரும் வாகனங்களின் மீது பாயவோ வாய்ப்புள்ளது. விபத்து ஏற்படும்போது பைக் ஓட்டுநர்களுக்கு உடல் ரீதியான பாதுகாப்பு மிகக் குறைவாகவே இருப்பதால், உயிரிழப்பு அல்லது வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், அதிக வேகத்தில் வாகனங்களுக்கு இடையே ஊடுருவிச் செல்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் கணிக்க முடியாத சூழலை உருவாக்குகிறது என்பதையும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சாலை காலியாக இருப்பதை உறுதி செய்த பிறகு ஒரு வாகன ஓட்டி தனது பாதையை (lane) மாற்றலாம். ஆனால் அதே நேரத்தில் அதீத வேகத்தில் வரும் பைக் சில நொடிகளில் அதே இடத்திற்கு வந்துவிடக்கூடும். இதனால் இரு தரப்பினருக்கும் விபத்தைத் தவிர்க்கத் தேவையான எதிர்வினையாற்றப் போதுமான நேரம் கிடைப்பதில்லை.

அதேபோல், ஒற்றை சக்கரத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளையும் பிரிகேடியர் பின் சுவைதான் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சாகசம் பைக்கின் சமநிலை, திசை திருப்பும் திறன் (steering) மற்றும் பிரேக்கிங் திறனை வெகுவாகக் குறைக்கிறது என்றும், அத்துடன் சாலையின் சீரற்ற தன்மை, தடைகள், குறுக்குக் காற்று மற்றும் சாலை மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை கட்டுப்பாட்டை இழக்கும் அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

அப்பாவியான வாகன ஓட்டிகளும் ஆபத்துக்குள்ளாகும் நிலை

அதிகாரிகளின் கூற்றுப்படி, அதிக வேகம் ஓட்டுநரின் பார்வைக் களத்தைக் (field of vision) குறைக்கலாம், தூரத்தைக் கணிக்கும் திறனைப் பாதிக்கலாம் மற்றும் முடிவெடுக்கும் வேகத்தைக் குறைக்கலாம். அதே வேளையில் விபத்தின் போது ஏற்படும் மோதல் விசையை இது கணிசமாக அதிகரிக்கிறது. இத்தகைய பொறுப்பற்ற நடத்தை, அப்பாவி வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும். அதிவேகமாக வரும் பைக்கைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர்கள் திடீரெனத் தப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ​​இது தொடர் விபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.

“சாலை என்பது சாகசங்களுக்கோ அல்லது வேகச் சோதனைகளுக்கோ உரிய இடமல்ல,” என்று கூறிய பிரிகேடியர் பின் சுவைதான், பைக் ஓட்டுநர்கள் தங்களையும் மற்ற சாலைப் பயனாளர்களையும் பாதுகாத்துக் கொள்ள போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பொறுப்புடன் ஓட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இத்தகைய விதிமீறல்களைக் கண்காணித்து, பொறுப்பற்ற ஓட்டுநர்களையும் வாகன ஓட்டிகளையும் கண்டறிந்து கைது செய்ய திறமையான அமலாக்க அமைப்புகளும் கள ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel