துபாய் முனிசிபாலிட்டி கடந்த ஜூலை மாதத்தில் எமிரேட் முழுவதும் கட்டுமானத் திட்டங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. இக்காலகட்டத்தில் 4,992 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 1,761-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
எமிரேட் முழுவதும் கட்டிடப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுமார் 44 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவிலான கட்டுமானத் திட்டங்கள் இந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகராட்சியின் அவ்வப்போது வெளியிடப்படும் அறிக்கையின்படி, விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட திட்டங்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கான்கிரீட் ஆய்வு
மேலும், பல்வேறு கட்டுமானத் திட்டங்களில் கான்கிரீட் பயன்பாடு மற்றும் விநியோக செயல்முறைகளையும் துபாய் முனிசிபாலிட்டி கண்காணித்தது.
ஜூலை மாதத்தில், கட்டுமானக் கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 346,286 கன மீட்டர் கான்கிரீட், தேவையான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த நகராட்சி குழுக்கள் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
துபாய் முழுவதும் உள்ள கட்டிடங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நகராட்சியின் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக நகராட்சி தெரிவித்துள்ளது
959 புகார்கள் மீது நகராட்சி நடவடிக்கை
மேலும், இக்காலகட்டத்தில் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான 959 புகார்கள் கிடைத்ததாகவும், அவை குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெவலப்பர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் தேவைகளுக்கு இணங்குவதையும், எமிரேட் முழுவதும் பாதுகாப்பான கட்டுமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வதே தங்களின் தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் நோக்கம் என்று துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel