ஐக்கிய அரபு அமீரகத்தில் பாரம்பரியமாக ‘சுஹைல்’ (Suhail) நட்சத்திரத்தின் தோற்றம் குளிர்ந்த காலநிலையை நோக்கிய மாற்றத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டாலும், அமீரகக் குடியிருப்பாளர்கள் இன்னும் கோடையின் தீவிரத்தை முழுமையாக உணர்ந்து வருகின்றனர். அதன்படி சனிக்கிழமையன்று வெப்பநிலை 50°C வரை பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 29 அன்று மதியம் 2:30 மணிக்கு அல் தஃப்ரா பகுதியின் ‘படா டஃபாஸ்’ (Bada Dafas) இடத்தில் 50°C வெப்பநிலை பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது, இதுவே அன்று நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
பருவநிலை மாற்றம் மற்றும் கோடை வெப்பம் படிப்படியாகக் குறைவதோடு தொடர்புடைய நிகழ்வாகக் கருதப்படும் ‘சுஹைல்’ நட்சத்திரம் ஆகஸ்ட் 24 அன்று தோன்றிய ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் வரும் வாரங்களில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மக்கள் வெப்பத்தில் உடனடி மாற்றத்தையோ அல்லது தணிவையையோ எதிர்பார்க்கக்கூடாது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பநிலை குறையத் தொடங்கினாலும், அதிக ஈரப்பதம் காரணமாக வானிலை மிகவும் வெப்பமாகவும் அசௌகரியமாகவும் உணரப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தக் கோடை காலத்தில் அமீரகம் ஏற்கனவே பலமுறை 50°C என்ற அளவைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 51.2°C ஆகும். இது ஆகஸ்ட் 5 அன்று ‘படா டஃபாஸ்’ பகுதியில் பதிவானது.
பாதுகாப்பு ஆலோசனை
அமீரகம் முழுவதும் தீவிர வெப்பநிலை நிலவி வருவதால், மக்கள் பின்வருவனவற்றைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
- வாகன டயர்கள் மற்றும் பிற முக்கிய பாகங்களை அவ்வப்போது சரிபார்க்கவும்.
- தாகம் இல்லாவிட்டாலும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்கவும்.
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்கவும்.
- தளர்வான, எடை குறைந்த மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியவும்.
- கடும் வெப்பத்தில் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளவும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel