அபுதாபியின் முக்கிய தொழில்துறை பகுதியான, முசாஃபாவில் உள்ள 13 கிலோமீட்டர் நீளமுள்ள முக்கிய சாலைகளை மேம்படுத்த அபுதாபி அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு புதிய விரைவுச்சாலை, தொழிற்பகுதியை முகமது பின் சையத் நகரத்துடன் (Mohammed bin Zayed City) இணைக்கும் இரண்டு பாலங்கள் மற்றும் முக்கிய இண்டர்டெக்ஷன்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறையால் (DMT) அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், முசாஃபா, முகமது பின் சையத் சிட்டி மற்றும் சையத் சிட்டி (Zayed City) இடையே பயணிப்பவர்களின் பயண நேரத்தைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மணிக்கு 4,000 வாகனங்களைக் கையாளும் புதிய விரைவுச்சாலை
இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக, முசாஃபாவில் உள்ள ‘ஸ்ட்ரீட் 8’ சாலையில் ஒரு புதிய விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதில் ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகள் (lanes) இருக்கும். அத்துடன் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற வசதிகளை அணுகுவதற்காக இருபுறமும் கூடுதலாக தலா மூன்று பாதைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேறும் வாகனங்களிலிருந்து, நீண்ட தூரப் போக்குவரத்தை பிரிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்தச் சாலை மணிக்கு சுமார் 4,000 வாகனங்களைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்திட்டம் E30 சாலை மற்றும் ‘ஸ்ட்ரீட் 8’-ன் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. இதில் E30 சாலையில் உள்ள நான்கு சந்திப்புகள், ‘ஸ்ட்ரீட் 8’ மற்றும் E20 சாலைகளுடனான இணைப்புகள் மேம்படுத்தப்படுவதுடன், ஒன்பது முக்கிய சந்திப்புகளில் மாற்றங்களும் செய்யப்படும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், முசாஃபாவையும் முகமது பின் சையத் சிட்டியையும் இணைக்கும் வகையில் இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும். மேலும், பாதசாரிகளின் அணுகல்தன்மை மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு பிரத்யேக பாதசாரி பாலமும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இத்திட்டம் எவ்வாறு உதவும்?
முசாஃபா அபுதாபியின் ஒரு முக்கிய தொழில் மற்றும் வணிக மையமாகும். இது தினசரி பணிக்குச் செல்வோர், சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளும் வணிகங்கள் மற்றும் உள்ளூர் பயணங்களை மேற்கொள்ளும் குடியிருப்பாளர்கள் எனப் பலருக்கும் சேவையளிக்கிறது.
சாலை வலையமைப்பைப் பயன்படுத்தும் மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, DMT-யின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் பொறியாளர் ஈசா முபாரக் அல் மஸ்ரூயி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “முசாஃபாவின் சாலை வலையமைப்பு பல்வேறு வகையான பயனர்களுக்குச் சேவையளிக்கிறது. பணிக்குச் செல்லும் குடியிருப்பாளர்கள் மற்றும் சரக்கு கொண்டு செல்லும் வணிகங்கள் முதல், நாள் முழுவதும் உள்ளூர் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் வரை அனைவரும் இதில் அடங்குவர்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் அணுகல் பாதைகளிலிருந்து நீண்ட தூரப் போக்குவரத்தைப் பிரிப்பதும், சுற்றியுள்ள பகுதிகளுடனான இணைப்புகளை மேம்படுத்துவதும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் என்றும், அதே வேளையில் பயணங்களை எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீருக்கடியில் சாலை இணைப்புத் திட்டம்
தனித்தனியாக, அபுதாபி தீவின் கிழக்குப் பகுதியை முசஃபாவுடன் இணைக்கும் இரண்டு சுரங்கப்பாதைகளைக் கொண்ட ஒரு நீருக்கடியில் சாலை இணைப்பை அபுதாபி திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த வழித்தடம் கோர் அல் மக்தா மற்றும் ஹுதைரியத் தீவுக் கால்வாயின் (Hudayriyat Island Channel) கீழ் செல்லும், இது தீவுக்கும் தொழில்துறை மாவட்டத்திற்கும் இடையே மற்றொரு இணைப்பை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை திட்டமிடப்பட்ட இந்தத் திட்டங்கள் அனைத்தும், அபுதாபியின் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறைப் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்கும், அதன் சாலை வலையமைப்பை எதிர்கால வளர்ச்சிக்குத் தயார்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகின்றன என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel