அபுதாபியின் ஷேக் சையத் கிராண்ட் மசூதிக்கு வரும் பார்வையாளர்கள், அக்டோபர் 11 அன்று ஒரு சிறப்பு ஒளி நிகழ்ச்சியை ரசிக்கலாம். புதிய ஹிஜ்ரி மாதத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், நிலவின் பல்வேறு நிலைகளை விளக்கும் காட்சிப் பயணமாக இந்த ஐந்து நிமிட நிகழ்ச்சி அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் சுழற்சியை வெளிப்படுத்தவும், அங்கீகரிக்கப்பட்ட மையத்தால் வெளியிடப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியத்தை எடுத்துரைக்கவும் இந்த ஒளி நிகழ்ச்சி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மசூதியின் முக்கியப் பகுதிகள் முதல் ‘வஹத் அல் கரமா’ (Wahat Al Karama) பகுதி வரை இந்த ஒளிக்காட்சி விரிந்து பரவி, இரவு வானத்தின் கீழ் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 11 அன்று இரவு 8:00, 8:30, 9:00, 9:30 மற்றும் 10:00 ஆகிய ஐந்து நேரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒளி, வானியல் மற்றும் இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்நிகழ்ச்சி, ஹிஜ்ரி ஆண்டின் மாதங்களைத் தீர்மானிப்பதில் சந்திர நாட்காட்டிக்கு உள்ள முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது.
கட்டணம் மற்றும் பார்வையிடும் நேரம்
அபுதாபியின் இந்த முக்கிய அடையாள இடத்திற்கு, எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) வைத்திருக்கும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு 5 திர்ஹம்ஸ் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு 10 திர்ஹம்ஸ் என்ற நுழைவுக் கட்டணம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (People of Determination) ஆகியோர் இந்த வளாகத்திற்குள் இலவசமாக நுழையலாம்.
இதற்கான நுழைவுச்சீட்டுகளை www.szgmc.gov.ae என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 9:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை மசூதி பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில், காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மதியம் 2:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் பார்வையிடலாம்.
மேலும், ஒளி நிகழ்ச்சியைக் காணத் திட்டமிடும் பார்வையாளர்கள், அங்கு செல்வதற்கு முன் மசூதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகச் சமீபத்திய நேரங்கள் மற்றும் நுழைவு விதிமுறைகளைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel